சென்னை:

புதிய பார்வை இதழ் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு நாளை காலை அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று காலை நடராஜன் உடலுக்கு இயக்குனர் பாரதிராஜா அஞ்சலி செலுத்திய நிலையில், இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என் பாசத்திற்கும், நட்பிற்கும் உரிய ‘MN’ என்று நான் அன்பாக அழைக்கும் திரு.நடராஜன் அவர்களின் மறைவுக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது என தெரியாமல் தவிக்கிறேன்…

“புதிய பார்வை” பத்திரிகையின் துவக்கவிழா கன்னிமாரா ஹோட்டலில் நடந்தபோது குத்துவிளக்கு ஏற்றி உரையாற்றினேன். அதன்பின் நான் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம்…

நல்ல மனிதருக்கு இப்படியும் எதிர்ப்பா? என்று வருந்தினேன்..

மனித நேய மிக்க மனிதரை இழந்துவிட்டதற்காக இன்று வருந்துகிறேன்…

இலக்கியம், அரசியலில் சாதித்த ஒரு மனிதர் பிரிந்து விட்டதற்காக கண்கலங்குகிறேன்..

கல்லூரி நாட்களிலேயே ஒரு மொழிப்போராளியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் திரு.நடராஜன். இனமான மொழிக்காக போராடும் குணம் கொண்டவர்.

தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி புலிகளுக்கு வலு சேர்த்தவர்.

தமிழ் ஈழத்போராளிகளின் நினைவாக முள்ளி வாய்க்காலில நினைவு சின்னம் அமைத்ததில் இவரின் பங்கு ஒரு வீரரலாறு..

இதை நினைத்து கண்ணீர் சிந்துகிறேன்..

அரசியல் சாணக்யன் என்று ராஜீவகாந்தியால் பாராட்டப்பட்டவர்…

25 ஆண்டு காலமாக ஒரு சந்நியாசி போல துறவு வாழ்க்கையை கடைபிடித்து இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

இவர் நினைத்திருந்தால் அரசியலில் உச்ச இடத்திற்கு வந்திருக்க முடியும்.. ஆனால் இவரின் வழிகாட்டுதலில்தான் கடந்த முப்பது ஆண்டு கால தமிழ்நாடு இயங்கியது என்பதை யாராலும் மறக்கவும் முடியாது.. மறுக்கவும் முடியாது…

சில இழப்புகள் நம்மை உயிர்வரை வலிக்கச் செய்யும்..

நடராஜனின் இறப்பு.. என் ஆணிவேரையே அசைத்து விட்டது…

இவரின் ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாறட்டும்..

இவரைப் பிரிந்து வாடும் குடும்பத்திற்க இறைவன் ஆறுதல் கொடுக்கட்டும்…

கண்ணீருடன் பாரதிராஜா

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.