சேரன் இயக்கும் ‘திருமணம்… சில திருத்தங்களுடன்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சேரன் இயக்கத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கும் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.

இயக்குநர் சேரன் படம் என்றாலே குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு உண்டு. 

‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘தேசிய கீதம்’,  ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி’,  ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘மாயக்கண்ணாடி’, ‘பொக்கிஷம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சேரன்.

தங்கர் பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர், பிற இயக்குநர்களின் படங்களான ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘ஆடும் கூத்து’, ‘ராமன் தேசிய சீதை’, ‘யுத்தம் செய்’, ‘முரண்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ ஆகியவற்றிலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இதைத் தொடர்ந்து  சர்வானந்த், நித்யா மேனன் நடிப்பில் 2015-ம் வருடம் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார். அப்படத்தை வெளியிட பெரும் சிரமம் ஏற்பட்டதால், C2H (Cinema 2 Home) என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் (திரையரங்குகளில் படத்தை வெளியிடாமல்) சி.டி. மூலம் படத்தை வெளியிட்டார்.

அதன் பிறகு ஏற்பட்ட பணப்பிரச்சினையால் கடந்த நான்கு வருடங்களாக அமைதியாக இருந்துவிட்டார் சேரன்.

இந்த நிலையில் புது வீச்சுடன் களம் இறங்கியிருக்கும் அவர், தனது புதிய படத்தின் பெயரை வெளியிட்டார். அது.. திருமணம்!

இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கிறார். காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகமாகிறார்.  மேலும், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் சேரனும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்பு செய்கிறார்.

சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.

நீ்ண்ட நாட்களுக்குப் பிறகு அதே உற்சாகத்துடன்  களமிறங்கியிருக்கும் சேரனின்  திருமணம் படத்துக்கு  ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.