சென்னை:

‘கக்கூஸ்’ என்ற ஆவணப் பட இயக்குனரும், சிபிஐ(எம்எல்) பிரமுகருமான திவ்ய பாரதி தனது பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு நெருக்கமான 10 பேருக்கு மட்டுமே அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவரும்.

இது தொடர்பாக திவ்யா ‘தி நியூஸ் மினிட்’ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் கூறுகையில், ‘‘ போலீசார் என்னை கண்டுபிடிப்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. ஜாதி அமைப்புகளிடம் இருந்து மிரட்டல்கள் தொடர்ந்து வருகிறது. அவர்கள் பாலியல் தொந்தரவு மற்றும் ஆசிட் தாகுதல் நடத்துவோம் என்று மிரட்டுகின்றனர்’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘2009ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில் வாரண்ட் காரணமாக போலீசார் என்னை கடந்த 25ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நான் தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதிலிருந்து 4வது நாள் காவல் நிலையம் அருகே நின்று ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. ‘எவ்வளவு தைரியம் இருந்தால் ஆண்களை போல் ஒரு கடையில் நின்று டீ குடிப்பாய். நாங்கள் உன்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறோம்’ என்று மிரட்டினர்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஆவண படம் ஒளிபரப்புக்காக பொள்ளாச்சிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். என்னை பின் தொடர்பவர்களை தவிர்ப்பதற்காக பேருந்தில் இருந்து இறங்கினேன். தாராபுரத்தில் இருந்து கார் மூலம் சென்றேன். உடனடியாக எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘இந்த பயம் உனக்கு இருக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்’’ என்றார்.

‘‘ இது வரை என் மீது 12 புகார்கள் மதுரையில் அளிக்கப்பட்டுள்ளது. சைபர் தீவிரவாதம் உள்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் பாஸ்கர் மருதம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில் நான் நக்சலைட் என்று தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் போலீசார் எனது வீட்டிற்கு வந்த பிறகு தான் என் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எனக்கு தெரியவந்தது’’ என்றார்.

இது போன்ற மிரட்டல்கள் காரணமாக திவ்யா தனது பழைய செல்போனை நம்பரை மாற்றிவிட்டார். தற்போது புதிய நம்பரில் தான் அவரை தொடர்பு கொள்ள முடிகிறது. தற்போது அவர் தமிழகத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது தொடர்பான ‘கக்கூஸ்’ என்ற ஆவணப் படத்தை மதுரையில் பல இடங்களின் திரையிடுவதை போலீசார் தடுத்துள்ளனர்.