த்ரிஷ்யம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு மெகா மலையாள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா, சில நாட்கள் அதன் படப்பிடிப்பிலும் பங்கேற்றுள்ளார். ‘RAM’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தியாவில் படப்பிடிப்பை முடித்த பின்னர் லண்டனுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவலால் உலகமெங்கும் ஊரடங்கு இருப்பதால் வெளிநாடு செல்லும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு எப்போது முடியும், திரையுலக வாழ்க்கை இயல்புக்கு திரும்ப எத்தனை நாட்கள் எடுக்கும் என்பதெல்லாம் கேள்வி குறியாகவே இருப்பதால் இப்படத்தை கை விடுவதாக ஜித்து ஜோசப் கூறியதாக செய்திகள் வெளிவந்தது .
‘ராம்’ கைவிடப்பட்டதாக வெளியான வதந்திக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

“மோகன்லால் நடிக்கும் ‘ராம்’ படத்தைக் கைவிட்டுவிட்டு அடுத்த படத்தைத் திட்டமிடுகிறேன் என்று கடந்த சில நாட்களாகவே அழைப்புகளும், செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. கோவிட் கிருமி தொற்றுப் பரவல் காரணமாக ‘ராம்’ படத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் கரோனா நெருக்கடி குறைந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படும்.
உலகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்திய ஒருசில இடங்களில் கேரளாவும் ஒன்று என்பதால், இங்கு படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சாத்தியத்தை மனதில் வைத்து, கேரளாவிலேயே மொத்தம் நடக்கும் ஒரு திரைப்படத்தையும் நான் யோசித்து வருகிறேன். இதற்கு ‘ராம்’ திரைப்படம் கைவிடப்பட்டது என்று அர்த்தம் அல்ல. தற்போதைய சூழல் காரணமாக தாமதமாகியுள்ளது. அவ்வளவுதான்”.
இவ்வாறு இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.