வெட்டுக்கிளிகளுடன் பயணித்த கே.வி.ஆனந்த்..

வட இந்தியாவில் பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள், பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் , தனது ‘காப்பான்’’ படத்தில் வெட்டுக்கிளிகளால் வேளாண் தொழில் பாதிக்கப்படுவதை , உடம்பை ஜில்லிடவைக்கும் வகையில் காட்சிப் படுத்தி இருப்பார்.

அந்த காட்சிக்காக இப்போது, அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் ,வெட்டுக்கிளிகளுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார், கே.வி. ஆனந்த்.

‘’ 2012 ஆம் ஆண்டு ‘மாற்றான்’’ படத்தின் வெளிப்புற படப்பிடிப்புக்கு ‘மடகஸ்கர்’’ சென்றிருந்தேன்.அப்போது தான் வெட்டுக்கிளிகளின் , தாக்குதலை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது.

காரில் சென்றபோது , வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாய் பறந்து வந்தன. அது என்ன என்று எனக்குத் தெரியாது. கார் ஓட்டுநர் தான் விளக்கினார்.

அதன் பின் சென்னை வந்த பின் வெட்டுக்கிளிகள் குறித்து நிறையப் புத்தகங்களில் படித்து அறிந்து கொண்டேன்.

அந்த அனுபவங்களைக் கொண்டே , தஞ்சையில் வேளாண் தொழிலை வெட்டுக்கிளிகள் நாசம் செய்வதைக் காட்சியாக வைத்தேன்.

முதலில் நெருப்பினால் வேளாண் பயிர்கள் நாசம் ஆவதாக ஷுட் செய்ய நினைத்தேன். ஆனால் நெருப்பு சில ஏக்கர் பயிர்களை மட்டுமே நாசம் செய்யும் என்பதால், வெட்டுக்கிளிகளைக் காட்சிக்குள் கொண்டு வந்தேன்’’ என்கிறார், கே.வி.ஆனந்த்.

–  ஏழுமலை வெங்கடேசன்