நீட் தடை தேவை: அனிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குநர் ரஞ்சித்..!

--

நீட் குழப்படிகளால் தற்கொலை செய்துகொண்ட  தமிழக மாணவி அனிதாவுக்கு, சென்னை லயோலா கல்லூரியில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டு தனது குமுறலை வெளிப்படுத்தினார்.

மாணவி அனிதாவின் மறைவுக்கு தமிழகம் முழுவதும் இரங்கல் கூட்டங்களும் , போராட்டங்களும் நடைபெற்றபடியே இருக்கின்றன. பல இடங்களில் போராட்டங்களும் நடந்துவருகின்றன.

இதைத் தொடர்ந்து மறைந்து தமிழக மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் திரையுலக கலைஞர்கள், பல சமூகநல ஆர்வலர்கள் பலர்கலந்து கொண்டு மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ரஞ்சித்  பேசியதாவது:

“திறமை இருந்தும், மருத்துவராவதற்கான எல்லா தகுதியும் இருந்தும் கூட இடஓதுக்கீட்டின் கீழ் படித்த மாணவியாகத் தான் ஊடகங்கள் அனிதாவை பிரதிபலித்து வருகின்றன. உரிமையான இட ஒதுக்கீட்டையே பிச்சை போடுவது போல் செய்து மாணவர்களை மட்டம் தட்டும் வேலை நடக்கிறது.  ஒடுக்கப்பட்ட மாணவர்களின் தற்கொலை கல்விச் சமூகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரியாக இருக்கும் நீட் தேர்வை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவது அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கல்வியை வைத்து வியாபாரம் செய்யும் சூழ்நிலையும், அரசியல் செய்யும் சூழ்நிலையும் மாற வேண்டும்” என்று இயக்குனர் ரஞ்சித் குமுறலுடன் கூறினார்.

You may have missed