வெல்லும் வரை வீடு போகாத பிள்ளைகள்!

தந்தையை டால்டா டின்னுக்கு பறிகொடுத்தவர்கள்
நீதி கேட்கிறார்கள் ,கொடுத்து விடு என் நாடே…

வாழை இலையை பிளாஸ்டிக்கில் பார்த்தவர்கள்
பச்சை இலையையின் பக்கம் நிற்கினறனர்
பார்த்து நட என் நாடே… 

பூச்சிக்கொள்ளி மருந்தில் உயிர் நீத்த மண் புழுக்களை
உள்ளங்கையில் ஏந்த வரும்
பூமித்தாயின் பெருமூச்சில் பிறந்தவர்கள் ஏற்றுக்கொள். என் நாடே.. 

பிராய்லர் கோழியால் மரபணு மாற்றம் கொண்ட
அண்ணன்களில் அழுகுரலை சகியாமல்
உரக்கமுழக்கமிட வரும் அவர்கள் குரலை புரிந்துகொள் என் நாடே..

ஜெர்ஸி பசுவால் சர்க்கரை கூடிப்போன
தாயின் மடியில் தவழ்ந்தவர்கள்
மண்ணுக்கு தாய்ப்பால் வேண்டி
மவுன புரட்சி செய்வதை அறிந்து கொள் என் நாடே  

பண்பாடு என்ற சொல்லே மறத்துப்போன
எம் மண்ணில் உச்சரிக்க உதடுகள் பிறந்துவிட்டதை
உண்ர்ந்து கொள் என் நாடே

காளைகள்,  பயிருக்கு உரமாகும் 
சாண அண்ணமிடும் தாய்கள் என்றே
உனக்கு புத்திபுகட்டும் 
நவீன ஆசிரியர்களை புறந்தள்ளாதே என் நாடே…

வெல்லும் வரை வீடு போகாத பிள்ளைகள்
உலகுக்கு சொல்ல வரும் தமிழ் உறுதிப்பாட்டின்
எல்லைகள் என்பதை தெரிந்து விடு என் நாடே”   

–   சீனு ராமசாமி