அரிதாரம் பூசும் இயக்குநர்கள்…. துட்டும் கிடைக்குது.. புகழும் கிடைக்குது

மலஹாசன், அர்ஜுன். தனுஷ், நாசர் போன்ற நடிகர்கள், படங்களை இயக்குவதிலும் ஆர்வம் காட்ட-
திரைப்பட இயக்குநர்கள் அரிதாரம் பூசுவதில் அண்மைக்காலமாக மூழுமூச்சாக இறங்கி விட்டார்கள்.

மணிரத்னம் தவிர அநேகமாக இப்போது உள்ள எல்லா இயக்குநர்களுமே நடிப்பில் பிசியாகியுள்ளனர். (ஷங்கர் சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு தலை காட்டியிருப்பார்.)

இவர்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது பாரதிராஜா என்று சொல்லலாம். 1980 களிலேயே கல்லுக்குள் ஈரம் படத்தில் ஹீரோ வேடம் பூண்டார்.

அவருக்கு பிறகு ஹீரோ ஆகி ஜொலித்தவர்- சுந்தர்.சி.

டைரக்ஷனுக்கு ‘குட் பை’ சொல்லி விட்டு நடிப்பையே பிரதானமாக்கி கொண்ட இயக்குநர்கள் வரிசையில் –மனோபாலா, ஆர்.சுந்தரராஜன், சித்ரா லட்சுமணன் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

‘’ இளைய இயக்குநர்கள் எங்கோ போய் கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் முன்னொரு காலத்தில் எடுத்த படங்களை இப்போது எடுத்தால் ஓடி இருக்குமா? என்று தெரியாது. நடிகராக இருப்பது நல்ல அனுபவம்’’ என்கிறார், மனோபாலா.

நாடோடிகள் படம் மூலம் இயக்குநராக அறியப்பட்ட சமுத்திரக்கனி இன்று. பிசியான நடிகர்.’டைரக்ட் செய்வது அழுத்தமான வேலை. விசாரணை, வடசென்னை, சுப்ரமணியபுரம் போன்ற மாறுபட்ட படங்களில் நடித்தது நல்ல அனுபவம். நடித்தாலும் எனது முதல் காதலி டைரக்ஷன் தான்’’ என்கிறார், சமுத்திரக்கனி.

கரு.பழனியப்பன் ;மந்திர புன்னகை ’ மூலம் அரிதாரம் பூசினார்.

மிஷ்கின், ‘நந்தலாலா’’ படத்தின் வாயிலாக நல்ல நடிகராக கவனம் பெற்றார்.சில படங்களில் பின்னணி பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார், இவர்.

;டைரக்ஷன் தொழிலில் ;ரிஸ்க் அதிகம். ஆனால் நடிப்பில் எந்த ரிஸ்க்கும் கிடையாது. நல்ல சம்பளம் கிடைக்கிறது.பொதுமக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறது. இயக்கும் போது கிடைக்காத ‘பப்ளிசிட்டி’’ நடிக்கும் போது கிடைக்கிறது’’ என்பது- நடிகர்களாக புது அவதாரம் எடுத்த டைரக்டர்களின் ஒட்டுமொத்த குரல்.

ஏழுமலை வெங்கடேசன்