5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சென்னை: இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, உதவித் தொகை உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயரத்தி வழங்குதல், வேலை வாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு, தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வாய்ப்பு, வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மாற்றுத்திறனாளிகள் கோரி வருகின்றனர்.

இந்த 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அரியலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர். அரசு துறையில் உள்ள பின்னடைவு காலி பணியிடங்களை முழுமையாக நிரப்பிட உச்ச நீதிமன்ற முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரினர்.

நெல்லை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, மேட்டூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.