எடப்பாடியுடன் கருத்து வேறுபாடா? டில்லியில் ஓபிஎஸ் பேட்டி!

டில்லி,

மிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை திடீரென தனது ஆதரவாளர்களுடன் டில்லி சென்றார். இன்று முற்பகல் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மின்துறை அமைச்சர் தங்கமணியை உடன் அழைத்து செல்லவில்லை. இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு

கேள்வி: பிரதமரிடம் எந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்தினீர்கள்?

பதில்:  தமிழக மின் உற்பத்தி குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்தினேன். தமிழகத்துக்கு ஆண்டு முழுவதும் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வழங்குமாறுக் கோரினேன். அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை.

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி அளித்த கோரிக்கை மனுவையும்  பிரதமரிடம்  கொடுத்தேன்.  டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரிதமரிடம் கூறினேன். தேவையான உதவிகளைச் செய்வதாக அவரும் உறுதி அளித்தார்.

கேள்வி: மின்சாரத்துறை தொடர்பான ஒரு கோரிக்கையை பிரதமரிடத்தில் வைக்க செல்லும்போது துறை சார்ந்த அமைச்சரான தங்கமணியை ஏன் உங்களுடன் அழைத்து செல்லவில்லை?

அந்த கேள்விக்கு கடைசிவரை ஓபிஎஸ் பதில் அளிக்காமலேயே சென்றுவிட்டார்.

கேள்வி:  முதல்வர் பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு என்று சொல்லப்படுகிறதே?

பதில்:  முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை.

கேள்வி: ஜெயலலிதா இருந்த போது பச்சை நிறத்தில் இருந்த கட்சி பேனர்கள் தற்போது காவி நிறத்தில் மாறியது ஏன்?

பதில்:  இப்போது பிரதமரை சந்தித்துவிட்டு வெளியே வந்துள்ளேன். இப்போது என்ன கேள்வி கேட்க வேண்டுமோ அதை மட்டும் கேளுங்கள்.

கேள்வி: இரு அணிகள் ஒன்று சேர்ந்த போது உங்கள் அணியால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதா?

பதில்:  தர்ம யுத்தம் முடிந்து நிபந்தனைகள் எதுவும் இல்லாமல்தான் இணைந்தோம்.

கேள்வி: உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால்தான் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளாரே?

பதில்: உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கும் டெங்கு பாதிப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

கேள்வி: தினகரன் திரும்ப வந்தால் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா?

பதில்: இனிமேல் கட்சியில் கீழ்மட்டத்தில் இருந்து உழைத்து வருபவர்களைத்தான் சேர்த்துக்கொள்வோம்.

கேள்வி: கட்சிக்குள் உங்களுக்கு ஏதோ மன வருத்தம் இருப்பதாகக் கூறுப்படுகிறதே?

பதில்: ஆண்டுகாலம் கட்சியை வளர்க்க இரு தலைவர்களும் எதற்காகப் பாடுபட்டார்களோ அதற்காகவே தற்போது அந்த கட்சியின் ஆட்சி சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

எம்ஜிஆர் காலத்திலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் நாங்கள் எப்படி இருந்தோமோ, அந்த நிலையில்தான் தற்போதும் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

அதிமுகவில் இனி பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Disagreement with eps? OPS interview in Delhi, எடப்பாடியுடன் கருத்து வேறுபாடா? டில்லியில் ஓபிஎஸ் பேட்டி!
-=-