நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை: ப. சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை சரி செய்ய ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி  அறிவித்து இருந்தார். இதையடுத்து பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடிக்கான தன்னிறைவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு, பசியால் வாடி வரும் லட்சக்கணக்கான மக்களுக்கும், பல்வேறு மாநிலங்களில் இருந்து நடந்தே சொந்த ஊர் திரும்பி வரும் தொழிலாளார்களுக்கும் சிறிதும் உதவும் வகையில் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சரும் விமர்சித்து உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் மோடி நேற்று மாலை முடங்கிய பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க ரூ.20 லட்சம் கோடி என்ற அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொகுப்பு ஒன்றை அறிவித்தார். எதிர்பார்த்தபடி, அநேகமாக அரசு நினைத்தபடி அது தலைப்புச் செய்தியானது.

ஆனாலும் அதன் உள்ளடக்கப் பக்கம் காலியாக இருந்தது. இன்று முதல் நிதி தூண்டுதல் தொகுப்பு விவரங்கள் அடுத்து வரக்கூடிய நாட்களில் நிதியமைச்சரால் அறிவிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆகவே இன்று மாலை 4 மணிக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நானும் நிதியமைச்சரின் உரையைக் கவனித்தேன்.

நிதியமைச்சர் நமக்கு என்ன சொன்னார்? ரூ.3 லட்சம் கோடி கடன் உத்தரவாத நிதியத்தின் ஆதரவுடன் 45 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினருக்கு இணை இலவச கடன் திட்டம் வழங்கப்படும் என்றார்.

ரூ.20,000 கோடி துணைக் கடன் மற்றும் ரூ.10,000 கோடி ஈக்விட்டி பண்ட் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் இருக்கும். அரசு இபிஎப் பங்களிப்புகளுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கியது பணப்புழக்கத்திற்கு உதவும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் ஆகிவற்றின் கடன் கருவிகளில் (ரூ.30,000 கோடி) முதலீடு செய்யும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் கடன் உத்தரவாதம் அளிக்கும். உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் டிஸ்காம்களுக்கு பணப்புழக்கம் வழங்கப்படும்.

அரசாங்க ஒப்பந்தங்களுக்கு 6 மாதங்கள் காலம் நீட்டிக்கப்படும்.  டிடிஎஸ் விகிதம் 31-3-2021 வரைக்கும் (ரூ .50,000 கோடி) வரை குறைக்கப்படும் மற்றும் அனைவருக்கும் வரி திருப்பிச் செலுத்துதல் துரிதப்படுத்தப்படும். இவை பணப்புழக்கம் தொடர்பான மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் ஆகும்.

எனது கருத்துகளை சுருக்கமாகவும் கவனமாகவும் கூற விரும்புகிறேன். லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கும் பசி மற்றும் பேரழிவிற்குள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சர் இன்று கூறியதில் எதுவும் இல்லை என்பதை நான் முதலில் சுட்டிக்காட்டுகிறேன்.

பல ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள். ஒவ்வொரு நாளும் உழைப்பவர்களுக்கு இது ஒரு கொடூரமான அடி.

வறுமையில் தள்ளப்பட்ட மக்கள் தொகையில் பாதிக்கும் கீழ் 13 கோடி குடும்பங்களுக்கு பணப் பரிமாற்றத்தின் மூலம் பலன் எதுவும் இல்லை. நேற்று, பேராசிரியர் தாமஸ் பிக்கெட்டி மட்டும் அவர்களுக்கு பணத்தை வழங்க கெஞ்சினார் என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி