கோவை காந்திபுரம் கடந்த திங்கட் கிழமை மாலை நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பெண் காவலர் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட காவல் அதிகாரி குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல்துறை உயர் அதிகாரிகள், குறிப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியுடன் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்தோம். குறிப்பிட்ட பெண் காவலரைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

வீடியோவில் உள்ள காவல் அதிகாரி, ஜெயராம் காவல்துறை உதவி ஆணையர் ஜெயராம் ஆவார். அவரிடம் கேட்டபோது , ” நான் எந்தத்தவறும் செய்யவில்லை.

போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில் செயல்பட்ட போது எதிர்பாராத விதமாக நடந்தது அது. அந்த வீடியோவை கட் செய்து இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது போல சிலர் வெளியிட்டு வருகிறார்கள். அன்று நடந்ததை முழுமையாக வீடியோவில் பார்த்தால்தான் உண்மை நிலை தெரியும்.

எந்த ஒரு மனிதனும்  அந்த இடத்தில் இப்படி நடந்துகொள்ள மாட்டான். எனக்கும்  மகள் இருக்கிறார். அவர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்” என்று வருத்தத்துடன் கூறுகிறார் ஜெயராம்.

ஜனநாகய மாதர் சங்க கோவை மாவட்ட செயலாலளர் ராதிகா இந்த சம்பவம் குறித்து, “ஜெயராம் பாலியல் சீண்டல் செய்த காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி  வருகிறது. பொது இடத்தில் தன் சக காவலரையே பாலியல் சீண்டல் செய்வது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

கோவை கமிஷனர் அமல்ராஜ், , அந்த சம்பவம் குறித்து விசாரணையை நடத்திக் கொண்டிருப்பதாகவும்,  விசாரணைக்குப் பிறகு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.