பாலியல் உறவில் ஏன் இனியும் பாரபட்சம்?

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ணும் பெண்ணும் சமம் என்று எல்லோரும் சொல்லுவார்கள், சட்டமும் அதையேத்தான் ஓங்கிச் சொல்லும்.. ஆனால் பிரச்சினை என்று வந்துவிட்டால், பெண்கள் தரப்பிலும் சரி, பெண் குலத்திற்காகவே போராடும் சமூக போராளிகளும் சரி.. ‘’பெண் என்றும் பாராமல்..போயும் போயும் ஒரு பெண்ணிடம்…’’ என்றெல்லாம் ராகத்தையே முற்றிலுமாக மாற்றிப் பாட ஆரம்பித்துவிடுவார்கள்.. சட்டம் மட்டும், விதிவிலக்கா என்ன? அதுவும் சமயம் கிடைக்கிறபொழுதெல்லாம் வழ வழா கொழ கொழா என பூசி மெழுகாமல் போகாது..

இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 497-வது பிரிவு இப்படித்தான் காலம் காலமாய் அந்தந்த நேரத்தில் வெவ்வேறு நீதி ஆளுமைகள் முன் நியாயம் கேட்டு விதவிதமாய் விளக்கங்களை பெற்று வந்து கொண்டிருக்கிறது. இப்போது மீண்டும் உச்சநீதிமன்றத்தில் புயலை கிளப்பியிருக்கிறது அதே ஐபிசி 497. இந்த பிரிவில் பெண்ணுக்கும் தண்டனை அளிப்பது பற்றி சட்டத்திருத்த கருத்து கேட்டு நேற்று மத்திய அரசுக்கு நோட்டீசும் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் 497 என்னதான் சொல்கிறது என்று பார்ப்போம்.

“ஓர் ஆண், வேறொருவரின் மனைவியோடு உடலுறவில் ஈடுபட்டால் அது குற்றமாகும். ஆனால் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் குற்றம் செய்தவராக கருதப்படமாட்டார். குற்றம் நடப்பதற்கு தூண்டுதலாக இருந்தார் என்றுகூட குற்றம் சாட்டமுடியாது. குற்றத்திற்கு எதிராக பெண்ணின் கணவன் மட்டுமே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கமுடியும். ஐபிசி செக்சன் 198-(1),(2) ஆகியவை இதற்கான வாய்ப்பை கணவனுக்கு தருகிறது.. ஆண் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கும் ’’

இதையெல்லாம்விட இன்னும் ஒரு வித்தியாசமான அம்சம் இந்த பிரிவில் உண்டு.. பெண்ணின் கணவனும் உடந்தையாக இருந்து அவரது சம்மதத்துடன்  உறவு நடந்திருந்தால் அது குற்றமாகக் கருதப்படமாட்டாது. எதை வைத்து இப்படியொரு அம்சத்தை சேர்த்தார்கள் என்றே தெரியவில்லை..

அதாவது 497-ஐ பொறுத்தவரை, தன் மனைவியுடன் உறவு கொண்டவனை தண்டிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம், கணவனுக்கே வழங்கப்பட்டுள்ளது.. அந்த கணவனே நினைத்தாலும் தவறு செய்த மனைவிக்கு எதிராக புகார் கொடுக்க முடியாது.. அவளை தண்டிக்கவும் முடியாது.. கணவனுக்கு கொடுக்கப்பட்ட ‘’சிறப்பு’’ அதிகாரத்தில், இப்படியொரு பொத்தல்..

கணவன் புகார் கொடுத்தால், உடனே ‘குற்றம்’ஆகிவிடுகிற ஒரு உறவு, கணவன் சம்மதத்ததோடு நடந்தால், அதே ‘குற்றமே இல்லை’ என்றாகி விடுகிறது..

தண்டிக்கும் அதிகாரமும் சோடை போகச்சொல்லும் அதிகாரத்தையும் நமது சட்டம் ஒருசேர வழங்கியிருப்பதை என்னவென்று விவரிப்பது.

சட்டத்தின் பார்வை, அடல்ட்ரி என்பதை பிறன் மனை சேர்தல் என்கிறது.. ஆனால் பிறன் மனை சேர்தலில் இன்னொருத்தரின் மனைவி, இன்னொருத்தியின் கணவன் என்று வருகிறபோது, கோணம் வேறு மாதிரி போய்விடுகிறது.

மனைவியுடன் ஒருவன் உறவு கொண்டால் கணவன் புகார் தந்து, அவனை சட்டப்படி தண்டிக்க வாய்ப்பு உண்டு.. ஆனால் அதே தவறிழைத்தற்காக அந்த ஆண் மீது அவனின் மனைவி புகார் கொடுக்க முடியாது..

இன்னொரு பெண்ணை கணவன் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே, அவன் மீது பலதார மணம் என்ற குற்றத்தின் அடிப்படையில் இங்கே மனைவி புகார் கொடுக்க முடியும்.. புகார் கொடுக்காத வரை துணைவிகள் விவகாரத்தில் ஆணுக்கு தொல்லையில்லை.. புகார் கொடுத்தால் அடுத்தவேளை, அவனுக்கு சிறையில்தான் வாசம்..

மனைவியுடன் உறவாடியவன் மீது புகார் கொடுக்கும் அதிகாரம் எப்படி கணவனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதோ, அதேபோலத்தான் பலதார விஷயத்தில் கணவன் மீது புகார் கொடுக்கும் அதிகாரம், மனைவிக்கு மட்டுமே.

ஐபிசி 497-ஐ பொருத்தவரை, உடலுறவில் ஈடுபடும் ஆண்தான் குற்றவாளி என்றும் மாற்றான் மனைவியான பெண் பாதிக்கப்பட்டவள் என்றும் ஷரத்து சொல்லிவிடுகிறது.. ஆண், பெண் இருவரும் சம்மதித்து செய்யும் ஒரு செயலில் பெண்ணை தப்பிக்கவிட்டுவிட்டு ஆணை மட்டும் குற்றவாளியாக்கி தண்டிப்பதும் என்ன நியாயம் என்று காலம் காலமாக கேள்வி கேட்கப்பட்டுவருகிறது.. ஆனால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 15(3) சொல்லும், ‘’ பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பிரத்யேக உரிமைகளை அரசு உருவாக்குவதை இந்த பிரிவு தடுக்காது’’ என்கிற ஷரத்தை. ஐபிசி 497-ல் கொண்டுவந்து  பெண்ணை பாதிக்கப்பட்டவள் என்று காப்பாற்றிவிடுகிறார்கள்.

இங்கே பெண்கள் பக்கம் ஒரு முக்கியமான கண்ணோட்டத்தை விட்டுவிட்டார்கள்.. மாற்றான் மனைவியை ஒருவன் நிர்பந்தித்து உறவு கொண்டால், அது பாலியல் பலாத்காரம் ஆகும்.. அங்கேதான் பெண் என்பவர் உண்மையிலுமே பாதிக்கப்பட்டவர் ஆகிறார்.

ஆனால், நிர்பந்திக்கப்படாமல் விருப்பத்தோடு உறவாடும் மனைவி  எப்படி பாதிக்கப்பட்டவராவார்? தாம்பத்ய உறவின்போது கணவன் அவன் ஆசை தீர்ந்தவுடன் விலகிக்கொண்டால்,  மனைவிக்கு கொஞ்சம் வருத்தம் வந்தாலும் அதை பெரிதாக்க விரும்பாமல், வேறொருமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாகிப்போய்விடுவாள். அதுதான் இல்லற உறவில் விட்டுக்கொடுத்தல் என்கிற சிறப்பம்சம்..

ஆனால் கணவன் இருந்தும்  மனைவி மாற்று உறவு கொள்கிறாள் என்றால் அங்கே தேக சுகம் என்ற ஒன்றைத்தவிர வேறென்ன அவரின் நோக்கமாக இருக்க முடியும்? உறவுக்கு, கைம்மாறாக அவள் பொருளாதாரம் வேண்டினால் அது விபச்சார குற்றம்..

விபச்சார நோக்கமில்லாமல் ஒரு பெண் அன்னியனுடன் சேர்கிறார் என்றால், அவள் தன் பாலியல் தேவையை தான் விரும்பியபடி முழுமையாக தீர்த்துக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில்தானே? அப்படி பூர்த்திசெய்ய முடியாதவன் என்று தெரிய வந்தால் அந்த அன்னியனை அவள் ஏன் கிட்டே சேர்க்கப்போகிறாள்?

இப்படி பல விஷயங்களை அலசி தீர்மானித்து தனக்கு லாபம் கிடைக்கும் என்று தெரிந்தபிறகே, திட்டமிட்டு சுயநினைவோடு ஒரு காரியத்தை செய்யும் மனைவி என்கிற பெண்தான்… பாலியல் சுகத்திற்காக மட்டுமே அன்னியனை கூடிக்குலவி அவன் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெறக்கூடிய நிலைக்கு தள்ளிவிடும் ஒரு பெண்தான், ஐபிசி 497 க்கு மட்டும் அப்பாவியாக, பாதிக்கப்பட்டவராக தெரிகிறார். இது, என்ன மாதிரியான விசித்திரம்?

அரிசியை நீ கொண்டுவா..உமியை நான் கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து இருவரும் ஊதி ஊதி தின்னலாம் என்று சொல்வதைப்போலவே இருக்கிறது, பெண்களுக்கு மட்டும் பரிவு காட்டும் இந்த ஐபிசி 497 என்கிற பிரிவு..

இப்போதைய மத்திய அரசாலாவது இவ்விவகாரத்தில் மாற்றம் வருகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

கார்ட்டூன் கேலரி