டில்லி

மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் பேசி அவர்கள் எண்ணங்களையும் அறிந்துக் கொள்வது  அவசியம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

பொது,மக்களிடையே பிரதமர் மோடி மற்றவர்களின் கருத்தைக் கேட்பதில்லை என்னும் குறை அதிகமாக உள்ளது.  குறிப்பாக எதிர்க்கட்சியினர் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.   பல காங்கிரஸ் தலைவர்கள் இது குறித்து மோடியைத் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.   இன்று பிரதமர் மோடி கேரளாவைச் சேர்ந்த ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

மோடி தனது உரையில், “நான் இப்போது கலந்துக் கொள்ளும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்துள்ள பலருக்கு எனது எண்ணத்தில் இருந்து மாறுபட்ட எண்ணங்கள் இருக்கும். ஆனால்  நம்மை விமர்சிப்பவர்களின் கருத்தை அறிந்துக் கொள்ள நான் அதிகம் விரும்புகிறேன்.   உண்மையில் மாற்றுக் கருத்து உள்ளவர்களின்  எண்ணங்களை தெரிந்துக் கொள்வதே மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பொது வாழ்வில் உள்ள பலரும் தங்கள் கருத்துடன் ஒத்துப் போகும் மக்கள் மத்தியில் இருப்பதையே  விரும்புகின்றனர்.  ஏனென்றால் இவ்வாறு ஒத்த கருத்து உள்ளவர்களுடன் பழுகுவது சவுகரியமான ஒன்று என அவர்கள் நினைப்பதாகும்.   அவ்வளவு ஏன் நானே அது போன்ற சூழலில் இருப்பதைப் பல முறை விரும்பி உள்ளேன்.ஆனால் அதே நேரத்தில்  மற்றவர் எண்ணங்களை அறிந்துக் கொள்ள அவர்களிடம் விவாதிக்க வேண்டும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

நாடு தற்போதுள்ள நிலையில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது சகஜமாகும்.  புதிய இந்தியா அமைக்கப்படும் போது அனைத்து மக்கள் கருத்துக்களையும் ஒருங்கிணைப்பது அவசியமாகும்,.   அதிலும் இளைஞர்களின் கருத்து மிக முக்கியமானதாகும்.  தற்போது இந்தியாவில் லைசன்ஸ் ராஜ்யம் மற்றும் பர்மிட் ராஜ்யம்  முடிவடைந்துள்ளது.

எனவே ஒவ்வொரு சிற்றூர் மற்றும் சிறு நகரங்களில் உள்ளவர்களும் நாட்டை முன்னேற்ற முன் வர வேண்டும்.    அவர்கள் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ செல்வந்தர்களாகவோ இருக்கத் தேவை இல்லை. அவர்களுடைய எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் இந்தியாவை பெருமைப் படுத்தும் அளவுக்கு இருந்தால் போதுமானது.  அதுவே புதிய இந்தியா ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.