புயல் பாதித்த பகுதிகளில் மின் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசனை: அமைச்சர் தங்கமணி தகவல்

புதுக்கோட்டை:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.

நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டு சென்றுள்ள கஜா புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. இதை சரி செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. தமிழக மின் பணியாளர்கள் உடன் அண்டை மாநில மின் பணியாளர்களும் இணைந்து மின் இணைப்புகள் வழங்கி வருகின்றனர்.

கடந்த 15 நாட்களாக நடைபெற்று வரும் மின் இணைப்பு பணி இன்னும் தொடர்ந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்பாது மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது, புதுக்கோட்டையில் நகர பகுதிகளில் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. கிராம பகுதிகளில் 80 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள பகுதிகளிலும் ஓரிரு நாளில் மின் விநியோகம் சீரடையும் என்றார்.

அதுபோல  தஞ்சை மாவட்டத்தில் நகரப்பகுதிகளில்  100 சதவீதம் மின்சாரமும், ஊராட்சி பகுதி களில் 40 சதவீதமும் வழங்கப்பட்டுவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல, நாகை மாவட்டம்   வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் மின்சாரம் வழங்கப்பட்டு விடும் என்றார்.

புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு டிசம்பர் 5ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர. இதுகுறித்து,  தமிழக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கார்ட்டூன் கேலரி