கொல்கத்தா

த்திய ராணுவ ஆராய்ச்சி மையம் மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு மூலம் நோய் பரப்பப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் விளையும் காய்களில் உருளைக்கிழங்கும் ஒன்றாகும்.  நாட்டில் அதிகம் உருளைக்கிழங்கு விளையும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்றாகும்.   இங்கு வருடத்துக்கு சுமார் 1 கோடி டன் உற்பத்தி செய்யப்படுகிறது.    மேற்கு வங்க மாநிலத்தில் உருளைக்கிழங்கை பாதுகாக்க 453 குளிர்ப்பதன கிடங்குகள் உள்ளன.   இங்கு சுமார் 70 லட்சம் டன் உருளைக்கிழங்குகள் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய ராணுவ ஆராயச்சி மையம் சமீபத்தில் மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு ஆராய்ச்சியை நடத்தியது.   இந்த ஆராய்ச்சியில் ஒரு புதிய நோயின் 19 அறிகுறிகள் மேற்கு வங்கத்தில் விளையும் உருளைக் கிழங்குகளில் உள்ளது தெரிய வந்துள்ளது.   இந்த நோய் செயற்கையாக பரப்பப் பட்டுள்ளதாக மையம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

இந்த நோய் ஒரு கிழங்குக்கு தொற்றினால் அந்த நோய் அந்த நிலத்தில் பயிரிடப் பட்டுள்ள அத்தனை பயிர்களுக்கும் 48 மணி நேரத்தில்  பரவி அனைத்து பயிர்களும் அழிக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது.    இது நீர் மூலம் பரப்பப்படுகிறது.  இந்த நோய் தக்காளி உள்ளிட்ட  மற்ற  பயிர்களிலும் இதே நீரை பாய்ச்சுவதின் மூலம் பரவ வாய்ப்புள்ளது.

இது குறித்து பல்கலைக் கழக தாவரவியல் தலைவர் சஞ்சோய் குகா ராய், “தற்போதுள்ள நிலையில் சில பாதுகாப்பு காரணங்களுக்காக நாங்கள் மத்திய ராணுவ ஆராய்ச்சி மையத்தை இந்த சோதனையில் இணைத்தது பற்றி கூற இயலவில்லை.   ஆனால் இது ஒரு உயிரியல் தாக்குதல் என்பதை எங்களால் நிச்சயமாக கூற முடியும்.    இந்த தாக்குதல் மேற்கு வங்க மாநில பயிர்களை அழிப்பதற்காக யாரோ ஒரு எதிரி நடத்தி உள்ளதாக அஞ்சுகிறோம்”  என தெரிவித்துள்ளார்.

மத்திய ராணுவ ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஒருவர், “இதற்கு முன்பு பயிர்களைத் தாக்கிய நோய்களுக்கும் இந்த நோய்க்கும் வித்தியாசம் உள்ளது.   இந்த நோய் கண்ட உருளைக்கிழங்குகள் மேல் தோல் சுருங்கிய நிலையிலும்,  உள்ளே மட்டும் அழுகிய நிலையிலும் காணப்படும்.   இது நமது நாட்டின் உணவு உற்பத்தியை குலைக்க எதிரிகள் நடத்தும் உயிரியல் தாக்குதல் ஆகும்.   இந்த நோயை அடியோடு ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன”  என தெரிவித்துள்ளார்.