பாட்னா:

பிரதமர் மோடியின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக குரல்கொடுத்து வரும் பாஜக எம்.பி. யும் முன்னாள் பிரபல நடிகருமான சத்ருகன்சின்ஹா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி  தலைவர் ராகுல் முன்னிலையில் வரும் 28ந்தேதி  காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல பாலிவுட் நடிகரான சத்ருகன்சின்ஹா கடந்த 1990ம் ஆண்டில் இருந்து பாஜவில் இருந்து வருகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சத்ருகன் சின்கா அமைச்சராக இருந்தார். இரு தடவை பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார்.

பாஜகவுக்கு மோடி மற்றும் அமித்ஷா தலைமையேற்ற பிறகு, அவர்களின் மக்கள் விரோத நடவடிக்கை மூத்த தலைவர்களை அவமானப்படுத்தும் செயல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வரும் பாஜக மூத்த தலைவர்கள் மோடிக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சத்ருகன்சின்ஹாவும் மோடியின் நடவடிக்கைக்கு எதிராக கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார். சமீபத்தில்  மோடி குறித்து டிவிட் செய்துள்ள சத்ருகன்சின்ஹா,.5 ஆண்டுக்கால ஆட்சியில் ஒருமுறையாவது பத்திரிக்கையாளர்களை நீங்கள் சந்தித்து உண்டா? ஜனநாயக உலகில் 5 ஆண்டுகால ஆட்சியின்போது கேள்வி மற்றும் பதில் கூட்டத்தொடரை சந்திக்காத ஒரே பிரதமர் என வரலாற்றில் நீங்கள் பின்தள்ளப்படுவீர்கள். தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டு விட்டது. ஆட்சிமாற்றத்துக்கான சரியான தருணம் வந்துவிட்டதாக நீங்கள் நினைக்க வில்லையா?   என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதன் காரணமாக பாஜகவில் சத்ருகன்சின்ஹா மீதான அதிருப்தி அதிகரித்தது.

இந்தநிலையில், பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில்,சத்ருகன் சின்ஹா பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அவர் வென்ற தொகுதியான பாட்னா சாகிப் தொகுதி மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது,

இது சத்ருகன் சின்ஹாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்திற்கு வரும் நாளில், காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், பீகாரின் பாட்னா தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பெயர் அறிவிக்காமல் இருப்பதால், அந்த தொகுதி சத்ருகன் சின்ஹாவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.