சென்னை,

வடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.பா.பாண்டியராஜன் மீது தேசிய கொடி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையில், முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மா.பா.பாண்டியராஜன் மனு செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, தொகுதி மக்களின் அனுதாப ஓட்டை பெற ஓபிஎஸ் அணியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக, முன்னாள் கல்வி அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஜெயலலிதா இறந்ததுபோன்ற சவப்பெட்டி பிரசாரம் செய்தார்.

அதில், ஜெயலலிதா உடல்போன்ற பொம்மை மீது, தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது. இது தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்று புகார் கூறப்பட்டது.

அதையடுத்து உடனடியாக தேசிய கொடி அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெ. சவப்பெட்டி பிரசாரமும் ரத்து செய்யப்பட்டது.

இந்திய கொடி கோட்பாடு 2002, தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 பிரிவு 2-ன் படி, தேசிய சின்னங்கள் மற்றும் கொடிக்கு உரிய மரியாதையை அளிக்க தவறினால் மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் மா.பா.பாண்டியராஜனை கைது செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் மா.ஃபா பாண்டியராஜன் கைது செய்யப்பட்டு அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால், அவரது பதவி பறிக்கப்படும். அதன் காரணமாக ஆவடித்தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று பரபரப்பாக பேசப்படுகிறது.