“கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., அக் கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் பதவி இழப்பாரா” என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள்  அமர்சிங் (ராஜ்யசபா) ஜெயப்ரதா (லோக்சபா) ஆகியோர் அவர்கள் அங்கம் வகித்த சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.   இதையடுத்து அவர்கள் இருவரும், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், “கட்சியில் இருந்து நீக்கப்பட்டஎம்.பி., அக் கட்சியின் கொறடா உத்தரவை மீறினால் பதவி இழக்க நேரிடும் என்று 1996ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது நாங்கள் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்துமா” என்று கேட்டிருந்தனர்.
download
அப்போதைய தலைமை நீதிபதி அல்தாமஸ் இது குறித்து ஏழு கேள்விகளை எழுப்பினார்.    கட்சியிலிருந்து விலகிவயவர் சுதந்திரமாக செயல்படலாமா வேறு கட்சி சேரலாமா, நீக்கப்பட்டால்  அந்த கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்படலாமா அப்படி செயல்பட்டால் பதவி இழக்க நேரிடுமா என்பது உட்பட அந்த கேள்விகளை, இரு நீதிபதிகளுக்கு மேற்பட்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங் வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி நீதிபதி ரஞ்சன் தலைமை சிறப்பு அமர்வு, இக் கேள்விகளை ஆராய்ந்து வந்தது.
இன்று ரஞ்சன் அமர்வு, “குறிப்பிட்ட வழக்கை தொடுத்த அமர்சிங், ஜெயப்பிரதா இருவரது பதவிக்காலமும் முடிந்துவிட்டது. ஆகவே  இந்த ஏழு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. மற்றபடி அக் கேள்விகள் அப்படியே இருக்கின்றன” என்று தீர்ப்பளித்தது.
சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா நீக்கப்பட்டிருக்கும் நிலையில் இத் தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இன்று ஜி.எஸ்.டி. மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற இருக்கும் சூழலில் சசிகலா புஷ்பா என்ன முடிவு எடுப்பார் என்பதும் முக்கிய கேள்வியாக உள்ளது.