டில்லி

ந்திய கடற்படை பணியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை தான் இந்தியாவுக்கு சேவை செய்ய நினைத்ததுதான் தன்னுடைய தவறு என கூறி உள்ளார்.

சபி கிரி என்பவர் தனது 18 ஆவது வயதில் கடற்படையில் பணியில் சேர்ந்தார்.  அப்போது ஆணாக இருந்த அவர் அனைத்து சோதனை மற்றும் பயிற்சியில் வென்று இந்தப் பணியில் அமர்ந்தார்.  ஆனாலும் அவர் தன்னை உள்ளுக்குள்ளே பெண்ணாகவே உணர்ந்துள்ளார்.  அவருடைய 20 வயதில் இது மேலும் அதிகமாகி உள்ளது.  இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சபி கிரி ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.  அவரை சோதித்த மனோதத்துவ நிபுணர்,  இதற்கு ஒரே வழி அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறுவதே எனக் கூறினார்.

இதை தனக்குள் பலமுறை ஆலோசித்த சபி கடந்த வருடம் அக்டோபர் மாதம் 22 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு டில்லியில் சென்று பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார்.  அதன் பின் அவருடைய மன உளைச்சல் குறைந்தது.  மீண்டும் பணியில் சேர அவர் ஆயத்தமான போது அவருக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற வேண்டி இருந்தது.  விடுப்பை நீட்டிப்பதற்காக அவர் கடற்படை மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு சென்றார்.   அப்போது அவருடைய பாலின மாறுபாடு தெரிய வந்துள்ளது.   அவருடைய தொற்றுக்கான சிகிச்சை முடிவடந்த பின் அவரை மருத்துவர்கள் மனநல சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர்.

ஆறு மாதங்களுக்கும் மேலாக ஆண்கள் மனநலப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார் சபி.  பரிசோதனையில் அவருக்கும் மனநலம் நன்கு உள்ளதாகவும், அவர் இப்போது முழுமையான ஒரு பெண் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  அதையொட்டி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  கடற்படை விதிகளின்படி பெண்கள் படை வீரராக பணி புரிவது தடை செய்யப்பட்டுள்ளதாக இந்த மாதம் அக்டோபர் ஆறாம் தேதியன்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனால் சபி பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளார். இது குறித்து அவர், “நான் எனது தாய்நாடான இந்தியாவுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டது என் தவறா?  என் பணிநீக்கம் எனக்கு ஒரு அதிர்ச்சியாக உள்ளது.  நான் இதுவரை எந்த தவறும் செய்யவில்லை.  எனது தாய்நாட்டுக்கு நான் சேவை செய்ய நினைத்தது ஒன்று தான் நான் செய்த தவறு. எனக்கு ஏற்பட்ட இந்த துயரம் இன்னொரு சபி கிரிக்கு ஏற்படக்கூடாது. இதனால் நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். எனக்கு திறமை இருப்பதால் தானே என்னை என்னை தெர்ந்தெடுத்தனர்.  இப்போது ஏன் என் திறமையை மதிக்கவில்லை?  இன்னும் எனக்கு எதிரிகளுடன் போராடும் உடல் வலிவும் மன ஆற்றலும் உள்ளது” எனக் கூறி உள்ளார்.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து தாம் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.  முந்தைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதே போல ஒரு நிகழ்வில் இதே மாதிரி உறுதி அளித்ததும், ஆனால் இதுவரை அந்த நிகழ்விலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.