சென்னை,

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேரை சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் வாதம் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

டிடிவி தரப்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடும்போது, சபாநாயகர் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்றும், சபாநாயகரின் தீர்ப்பு ஒருதலைப்பட்சமான என கூறினார்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் சார்பாக மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார்.

அப்போது, தவே மத்திய அரசு குறித்து பேசியதை கண்டித்தார்.  நீதி மன்றத்தில் மத்தியஅரசை குறைசொல்லக்கூடாது என்றும் வழக்கிற்கு தேவையில்லாத வாதங்களை டிடிவி தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர் என்றும், அரசு மற்றும் சபாநாயகர் மீது குற்றச்சாட்டு வைப்பதால், விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் தேவை என்றும் வாதாடினார்.

பெரும்பான்மையை நிரூபிக்க போடப்பட்டுள்ள தடையை தேவைப்பட்டால் நீட்டிக்கலாம். இந்த விவகாரத்தின் மூலம் மறைமுக ஆதாயம் பெற திமுக தரப்பு முயல்கிறது என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆளுநர் தரப்பில் வாதாடிய ராகேஷ் திவேதி, தமிழகத்தில் அரசு  பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கூறினார்.

அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்குரைஞர் குறுக்கிட்டு, ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக வாதிட்டார்.

முன்னதாக தினகரன் தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை கேட்டோம். ஆவணங்களைத் தர வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை என்று அவைத் தலைவர் தனபால் பதிலளித்தார் என்று கூறினார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

பரபரப்பான இந்த வழக்கின் விசாரணையை காண ஏராள மான வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்களும் நீதிமன்றத்தில் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கது.