தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டார் குமாரசாமி – விஸ்வநாத் குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, பிற கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் தன் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டார் என்று தகுதிநீக்கம் செய்யப்பட்ட மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாத் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஸ்வநாத் கூறியுள்ளதாவது, “முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா மற்றும் இந்நாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டார்.

அவர் தன் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களையும் ஒட்டுக் கேட்டவர். அவர் யாரையும் நம்பியது கிடையாது. இப்படி ஒட்டுக்கேட்டு உரையாடல்களை பதிவுசெய்வதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவதற்கு பயன்படுத்தினார்.

அவர் எப்படி இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அவர் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யாவை நம்பியது கிடையாது. எனவே, பல காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களையும் ஒட்டுக்கேட்டார்.

சித்தராமைய்யாவின் தனி உதவியாளர் வெங்கடேசும் இதற்கு தப்பவில்லை. அவரும் ஒட்டுக்கேட்கப்பட்டார். எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றுள்ளார்.