திருவனந்தபுரம்:

ஹாதியாவின் படிப்பிற்கு இடையூறு செய்ய முயற்சி செய்கிறார்கள் என அவருடைய தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் மதம் மாறி திருமணம் செய்த பெண் ஹாதியா சேலத்தில் தனது படிப்பை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் ஹோமியோபதி கல்லூரியின் டீனை ஹாதியாவின் பாதுகாவலராக நியமிக்கிறோம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் கல்லூரியில் மீண்டும் சேர்ந்த ஹாதியா நிருபர்களிடம் பேசுகையில் ‘என்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை’ என்று பரபரப்பு பேட்டி அளித்தார். இந்நிலையில் அவருடைய தந்தை அசோகன், ‘‘ஹாதியாவின் படிப்பிற்கு இடையூறு செய்ய முயற்சி செய்கிறார்கள், என்னுடைய மகளை காப்பாற்ற உச்சநநீதிமன்றம் செல்வேன் என தெரிவித்துள்ளார்.

என்னுடைய மகள் படிப்பை முடிப்பதற்கே சேலம் கல்லூரிக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுப்பியது, அதற்கு இடையூறு செய்யப்பட்டால் குற்றமாகும் என கூறிஉள்ளார் அசோகன். சேலம் கல்லூரியில் ஹாதியா செய்தியாளர்களிடம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார் அசோகன்.

“என்னுடைய மகள் அவருடைய படிப்பை முடிப்பதற்கே நீதிமன்றம் கல்லூரிக்கு அனுப்பி உள்ளது. ஆனால் என்னுடைய மகள் அதனை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. சிலர் அவருடைய படிப்பிற்கு இடையூறு செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு மிரட்டப்பட்டு உள்ளார். எனக்கு மிகவும் கவலையளிக்கிறது,” என்றார்.

ஷபின் ஜகானுடன் அகிலாவிற்கு நடைபெற்ற திருமணத்தை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஷபின் ஜகான் ஹாதியாவை கல்லூரியில் சந்திக்கலாம் என்று செய்திகள் வெளியாகும் நிலையில், “நான் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுப்பேன், என்னுடைய மகளை காப்பாற்ற சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்வேன். நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கையும் உள்ளது’’ என்றார்.