ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏமான தோப்பு வெங்கடாசலத்துக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேச்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளார். இன்று  வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக வேட்பாளருக்கு எதிராக தோப்பு சுயேச்சையாக போட்டியிடுவதால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபை தொகுதி  எம்எல்ஏவாக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். முன்னாள் அமைச்சரான இவருக்கு, தற்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால், இபிஎஸ், ஓபிஎஸ் தலைமைமீது கடும் கோபத்தில் உள்ள  தோப்பு வெங்கடாசலம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது இடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சரை வைத்துப் பார்த்து வந்ததாகவும், பெருந்துறை பகுதியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டும் தனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது பெருந்துறை தொகுதியில்  சுயேச்சையாகக் களமிறங்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி இன்று மதியம் தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெயகுமார் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் களமிறங்குவதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பாலு உதயசூரியன் சின்னத்தில்  போட்டியிடுகிறார்.