கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி இன்று ஆஜராகாத காரணத்தால், வழக்கின் விசாரணையை 18ம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு. ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி, அவருடன் வழக்கில் தொடர்புடைய உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருடு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜாரக வேண்டுமென ஏற்கனவே நீதிபதி தெரிவித்திருந்தார்.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கருப்பசாமி, முருகன் ஆகிய இருவர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நிர்மலா தேவி ஆஜாராகவில்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, நவம்பர் 18ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். மேலும், அன்றைய தினம் மூவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நவம்பர் 18ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கப்படும் என்று அறிவித்த நீதிபதி பரிமளா, நிர்மலா தேவி ஆஜராகாத பட்சத்தில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.