சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி குறித்த விவரத்தை  தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. அதனப்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை விவசாயிகள் பயன்பெறுவார்கள், எத்தனை கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்தவாறு வங்கிகளில் நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

15வது தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரும், எடப்பாடி அரசின் கடைசி கூட்டத்தொடருமான, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்  சென்னை கலைவாணர் அரங்கில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 5ந்தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் கடைசி நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி,  கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக  அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள அரசாணையில், மாவட்டம் வாரியாக எத்தனை பேர் பயன்பெற உள்ளனர், அதற்காக எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15  நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.