திட்டமிட்ட, பாசிச தாக்குதல்: ஜேஎன்யூ சம்பவம் பற்றி மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: ஜேஎன்யூ தாக்குதல் ஒரு திட்டமிட்ட, பாசிச தாக்குதல் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி இருக்கிறார்.

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை அடித்து தாக்கினர். காயமடைந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலுக்குள்ளான ஜேஎன்யூ மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் பேசுகையில், இது திட்டமிட்ட தாக்குதல், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் தான் விடுதிக்குள் நுழைந்து தாக்கினர். தாக்குதலின் போது அவர்களின் பெயர்களை சொல்லியே தாக்கி உள்ளனர் என்றார்.

இந்நிலையில் ஜேஎன்யூ தாக்குதல் திட்டமிட்டது, பாசிச தாக்குதல் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாணவர் காலத்தில் நானும் அரசியலில் இருந்திருக்கிறேன். போராட்டத்தில் இறங்கி இருக்கிறேன். ஆனால் இப்போதிருக்கும் சம்பவம் போல இருந்தது இல்லை.

டெல்லி ஜேஎன்யூ தாக்குதல் திட்டமிட்ட பாசிச துல்லிய தாக்குதல். போலீசார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மத்திய அரசின் ஆளுகையின் கீழ் உள்ளனர்.

ஒரு பக்கம் பாஜக குண்டர்களை அனுப்புகின்றது. மறுபக்கம் போலீசை செயல்பட விடாமல் முடக்குகின்றனர். உயரதிகாரிகள் உத்தரவால் போலீஸ் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றனர்.

மத்திய அரசுக்கு எதிராக பேசினால் பாகிஸ்தானியர்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு  எதிரி, ஆன்ட்டி இண்டியன் என்று பல பெயர்களில் முத்திரை குத்தப்படுகின்றனர் என்றார்.