குத்துவிளக்கின் தெய்வீக அம்சங்கள்!!!
மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் குத்து விளக்கு, சமய சார்பான சடங்குகளிலும், பொது விழாக்களிலும் முக்கிய இடம் பெறுகின்றன. குத்துவிளக்கு தெய்வீகமானது. பிரபஞ்சம் பஞ்சபூத சக்தியினால் ஆனது என்பதை விளக்கும் தெய்வ அம்சம் பொருந்திய குத்துவிளக்கின் பஞ்ச முக தீபங்களும், அன்பு, நிதானம், சமயோசிதம், மன உறுதி, சகிப்புத்தன்மை நற்குணங்களையும் குத்து விளக்கேற்றும் பெண்களுக்குத் தீப ஒளியில் பிரகாசிக்க வேண்டும் என்பதே இதன் தத்துவமாகும்.
குத்துவிளக்கின் அடிப்பாகம் மலர்ந்த தாமரைப் பூப்போல அகன்று வட்டமாக இருப்பதால் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் பிரம்மதேவியைக் குறிக்கிறது. குத்துவிளக்கின் தண்டுப்பாகம் தூணைப்போன்று உயரமாக இருப்பதால் ஓங்கி வளர்ந்து பூமியை ஓரடியாலும் ஆகாயத்தை ஓரடியாலும் அளந்த நெடுமாலாகிய மகாவிஷ்ணுவைக் குறிக்கின்றது.
குத்துவிளக்கின் அகல் விளக்குத் தண்டுக்கு மேலே அகல் போல் நெய் அல்லது எண்ணெய் ஊற்றப்பட்டுள்ள பாகம், சிவபெருமான் கங்காதேவியை தன் ஜடா முடியில் தரித்திருப்பது போல் இருப்பதால் இப்பாகம் உருத்திரனைக் குறிக்கின்றது.
குத்துவிளக்கின் திரியிடும் கண் பகுதியில், திரி எரிவதற்குரிய பஞ்ச முகங்களும் முக்கண் உடைய மகேஸ்வரனை (பஞ்சமுகன்) குறிக்கின்றது.(ஈசானம், வாமதேவம் சத்யோசதம், தத்புருஷம், அகோரம் என்பதாகும்.)
குத்துவிளக்கின் மேல்தண்டு பகுதி, அகலின் மேல் கும்ப கலசம் போல் உள்ள உச்சி பாகம் இருப்பதால் ரூபா ரூபத்திருமேனி உடைய சதாசிவனாய் பாவிக்கத்தக்கது. அதில் ஊற்றப்படும் எண்ணெய், அகல் பாகம் முழுவதும் பரவியுள்ள நெய்யானது உருவமின்றி எங்கும் பரவி நிற்கும் நாத தத்துவத்தைக் குறிக்கின்றது. தீபம் எரியக்கூடிய திரியில், இந்து தத்துவத்தை அல்லது வெண்மை நிற ஒளியை விளக்குகிறது.(பிந்து)
தீபத்திலிருந்து ஒளிவிடும் சுடரின் தீப்பிழம்பு லட்சுமி கடாட்சத்தை தரும் மகாலட்சுமி தேவியின் சொரூபமாகக் கருதப்படுகிறது. தீபத்தில் ஒளி பிரகாசமாய் இருப்பதால் இது ஞானமயமான சரஸ்வதி தேவியின் சொரூபத்தைக் குறிக்கின்றது. தீபத்திலிருந்து வெளிப்படும் சூடானது எரிக்கும் சக்தியானது அழிக்கும் சக்தியாகிய ருத்திராணியின் சொரூபமாகக் கருதப்படுகிறது