நாட்டில் விவாகரத்து பெருக கல்விதான் காரணம்! சர்ச்சையை தொடங்கிய மோகன் பகவத்

அகமதாபாத்:

நாட்டில் விவாகரத்து பெருக கல்விதான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.. இது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆர்எஸ்எஸ் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோகன் பகவத், “இன்றைய காலகட்டத்தில் நாட்டில்  விவாகரத்துகள் அதிகரித்து விட்டன. படித்த மற்றும் வசதிபடைத்த குடும்பத்தில்தான் அதிகப்படியான விவாகரத்துகள் நடக்கின்றன என்று கூறியவர்,  கல்வி மற்றும் செல்வத்தின் காரணமாக அவர்களுக்கு ஆணவம் வந்துவிடுகிறது. அதன் முடிவு குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விடுகிறது.

இந்தியாவுக்கு இந்து சமுதாயத்தை விட வேறு சிறந்த மாற்று கிடையாது என்றும் இந்து மக்களுக்கு, குடும்ப உறவுகளை பேணிக் காப்பதைத் தவிர வேறு வழி இல்லை. நாட்டில் தற்போதைய நிலையில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அனைவரும் போராடிக்கொண்டிருக்கின்றனர், மில் முதலாளிகளும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்களும் மாணவர்களும் போராடி வருகின்றனர். யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அதிருப்தியுடனே வாழ்கின்றனர் என்று  கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,   சாதாரண, அற்பத்தனமான விஷயங்களுக்கெல்லாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கின்றனர்,  அந்த சமூகம் என்பது நல்லொழுக்கத்துடன் இருக்க வேண்டும். சமூகம் என்று நான் சொல்வது ஆண்களை மட்டும் இல்லை, ஆண் பெண் இருவரையும்தான் என்று குறிப்பிட்டார்.

உலகில் இரண்டு போர்கள் முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் உலகப்போருக்கான  யுத்தம் வேறு வடிவில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. வன்முறையும் எதிர்ப்பு உணர்வும் இங்கு அதிகரித்து காணப்படுகிறது, இது தவிர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோகன் பகவத்தின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையாக பதில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை மோகன் பகவத் அழைத்துச் செல்ல விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்….

மோகன் பகவத்தின் கருத்து விவாதப்பொருளாகி சர்ச்சையாகிக்கொண்டிருக்கிறது…