அம்பை மாற்றி பிடித்த மோடி : திவ்யா ஸ்பந்தனா கிண்டல்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பாஜக தேர்தல் கூட்டத்தில் அம்பை மாற்றி பிடித்த பிரதமர் மோடியை காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா கிண்டல் செய்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 13) தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேனி மற்றும் ராமநாதபுரத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். அதில் ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), எச்.ராஜா (சிவகங்கை), தமிழிசை சவுந்தரராஜன் (தூத்துக்குடி), திருநெல்வேலி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடிக்கு அந்த பொதுக்கூட்டத்தில் வில் ஒன்றைப் பரிசாக அளித்தார்கள். பிரதமர் மோடி அதை வைத்துக் கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் போது அம்பை மாற்றிப் பிடித்திருந்தார். மோடியின் இந்தப் புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகப் பரவி வருகிறது. பல நெட்டிசன்கள் இதை கிண்டல் செய்து வருகின்றனர்

 

மோடியின் இந்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ள பதிவில், ”அங்கிள்ஜி, முக்கியமானது எது என பாருங்கள். எப்போதோ ஒரு முறையாவது கேமராவைப் பார்ப்பதை விட்டுவிட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் பாருங்கள். கேமரா கண்டிப்பாக உங்கள் நண்பனில்லை. அந்த நட்பை முறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் வணங்கும் கடவுள் ராமரும் சந்தோஷமாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.