கோவை: தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகள் வெடித்ததில், கோவையில் காற்றின் மாசு 50 சதவீதமாக இருந்திருக்கிறது.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏராளமான பட்டாசுகள் நாடு முழுவதும் வெடிக்கப்பட்டன. தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு என அனைத்து நகரங்களிலும் பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளந்தது.

தமிழகத்திலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டின. பட்டாசுகள், இனிப்புகள் என ஏகபோகமாக இருந்தது தீபாவளி. பட்டாசுகளி வெடி சத்தம் எங்கும் ஒலித்தது.

அதே நேரத்தில் காற்றின் மாசும் அதிகரித்தது. கோவை நகரில் பட்டாசு வெடிப்புகளின் போது கார்பன் மோனாக்சைடின் பரவல் 30 முதல் 40 சதவீதம் வரை இருந்தது. ஒலி மாசு 25 முதல் 40 சதவீதமாக இருந்தது.

அதற்கு காரணம், பெரும்பாலான பெற்றோர்கள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தங்கள் குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்பது தான். இந்த தகவல் கோவை மாநகராட்சி பொருத்தியிருக்கும் கருவிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கோவை நகரில் உள்ள சிங்காநல்லூரில் 79.7 பிபிஎம் ஆக காற்றின் மாசு இருந்திருக்கிறது. அதாவது வழக்கமானதை விட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகமாகும். கார்பன் மோனாக்சைடின் பயன்பாடும் வழக்கமானதை விட 66.63 பிபிஎம் ஆக பதிவாகி இருக்கிறது.

கவுண்டம்பாளையத்தில் வழக்கமான 48 பிபிஎம் என்ற காற்றின் மாசு, 71.65 ஆக உயர்ந்திருக்கிறது. சாய்பாபா காலனி, ஆர்எஸ் புரம் ஆகிய பகுதிகளில் முறையே 48, 40 ஆக இருந்திருக்கிறது.

ஆச்சரியத்தக்க வகையில், அதிக கட்டிங்கள் கொண்ட பகுதியான டவுன் ஹாலில், 30 சதவீதம் தான் காற்றின் மாசு அதிகரித்திருக்கிறது. மொத்தத்தில் நகர் பகுதிகளில் 25 சதவீதம் முதல் 30 வரையும், கவுண்டம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பஞ்சாயத்து பகுதிகளில் அதிக ஒலி மாசு பதிவாகி இருக்கிறது.