சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகஅரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும்,  5774 அரசு பஸ்களில் 2.67 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களிலிருந்து 10,940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ( 24-ந் தேதி)  26-ந் தேதி வரை, 3  நாட்களுக்கு சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 10,940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதே போன்று பிற ஊர்களுக்கு இடையே  8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முடிந்த பின் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்களுக்கு 4,627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தீபாவளிக்காக  கடந்த 2 நாட்களில் மட்டும் 5,774அரசு பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது.

அதன்படி,  கடந்த 24-ந்தேதி சென்னையில் இருந்து 2 ஆயிரத்து 968 பஸ்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 343 பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று சென்னையில் இருந்து 2 ஆயிரத்து 806 பஸ்களில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 809 பேர் பயணம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 5,774 பஸ்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 152 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பதிவு நேற்று இரவு 9 மணி வரை நிலவரம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

பயணிகளின் கூட்டம் மற்றும் அதிக அளவிலான  பேருந்துகள் இயக்கம்  காரணமாக, சென்னையில், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூவிருந்தவல்லி மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன.

பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த பேருந்து நிலையில், 600க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.