தீபாவளி பண்டிகை: சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் குறித்த விவரம் அறிவிப்பு

சென்னை:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணிகள் வசதிகளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், சென்னை யில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு நவம்பர் 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை, 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கோயம்பேடு உள்பட  மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் சானிட்டோரியம்,  தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் கலைஞர் கருணாநிதி நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை, மதுரை, திருவனந்தபுரம், பெங்களூரு, சேலம், கோவை செல்லும் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாதவரத்தில் இருந்து புறப்படும்.

காஞ்சிபுரம், வேலூர், ஒசூர், தருமபுரி செல்லும் பேருந்துகள், பூந்தமல்லியில் இருந்தும் புறப்படும்.

கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும்,

திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தும் புறப்படும். 

 புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள், கே.கே.நகர் பணிமனையிலிருந்து புறப்படும். 

 நவம்பர் 3 முதல் 7ம் தேதி வரை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்கள் அனைத்தும், ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர். சாலை மூலமாக செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வழியாக செல்லுமாறும் போக்குவரத்துத் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.