தீபாவளி பண்டிகை: தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு 3, 5ந்தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை:

தீபாவளி பண்டிகை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் தென்மாவட்ட மக்களின் வசதிக்காக தென்னக ரயில்வே 3ந்தேதி மற்றும் 5ந்தேதி ஆகிய தினங்களில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

வரும் 6ந்தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வரும் 5ம் தேதியும் தமிழக அரசு அரசு விடுமுறையை அறிவித்து உள்ளது.மொத்தம்  4 நாட்கள் விடுமுறை என்பதால்  ஏராளமானோர் தங்கள் சொந்த ஊரில் குடும்பத் தோடு புத்தாடை அணிந்து,  விருந்துண்டு, பட்டாசு வெடித்து கொண்டாட  ஆயத்த மாகி வருகின்றனர்.

இதன் காரணமாக தென்மாவட்டம் நோக்கி செல்லும் பேருந்துகள், ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழியும். இதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும், ரயில்வே சில சிறப்பு ரயில்களையும் அறிவித்து உள்ளது. இவைகள் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு காரணமாக நிரம்பி உள்ள நிலையில், பயணிகள் தேவையை மற்றும் நெரிசலை  முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்து அறிவித்து உள்ளது.

அதன்படி, வரும் 3ந்தேதி (நாளை-சனிக்கிழமை)  சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது காலை  9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக இரவு நெல்லையை சென்றடைகிறது.

அதுபோல வரும் 5ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.50  மணிக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது.

அதுபோல, நெல்லையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் வரும் 4ந்தேதி மற்றும் 7ந்தேதி காலை 7.10 மணிக்கு முன்பதில்லா சிறப்பு ரயில் புறப்பட்டு அன்று இரவு  தாம்பரம் வந்தடைகிறது.

இந்த தகவல்களை தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.