தீபாவளிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க இன்றும், நாளையும் முன்பதிவு செய்யலாம் – போக்குவரத்து கழகம்
தீபாவளிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க இன்றும், நாளையும் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளுக்கு செல்ல இன்றே டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது.
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தினமும் சுமார் 1000 பேருந்துகள் இயக்கப் பட்டுவருகின்றன. இதுதவிர திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம் போன்ற போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. வழக்கமான நாட்களைக் காட்டிலும் பண்டிகை நாட்களில் விரைவு பேருந்துகளும் சொகுசு பேருந்துகளும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும்.
இதுதவிர, சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்ட ஏசி, படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்து, கழிப்பறை வசதியுள்ள பேருந்துகளும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்கிழமை) வருகிறது. இந்த பண்டிகையையொட்டி அரசு விரைவு பேருந்துகளின் தீபாவளி டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கூறியதாவது “ அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். நவம்பர் 2-ம் தேதியில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த சிலர் நேற்று டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், நவம்பர் 3-ம் மற்றும் 4-ம் தேதியில் பயணம் செய்ய விரும்புவோர் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம்.
300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதில், சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், திருவான்மியூர், தாம்பரம் உட்பட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதுதவிர, www.tnstc.in என்ற இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் “ என்று கூறினர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக 1,450 புதிய பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.