சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் சென்னை தியாகராய நகர் பகுதியில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையின் போது, தமிகத்தில் பலரும் புதிய ஆடைகள், நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். சென்னையில் பிரதான வணிக நகரமான தியகராய நகர் பகுதியில் தற்போது பல்லாயிரம் மக்கள் வந்து வேண்டிய பொருட்களை வாங்கி சென்று வருகின்றனர்.

தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரமே உள்ளதால் பலரும் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் குவிந்து விரும்பிய பொருட்களை வாங்குகிறார்கள். கொரோனா குறித்த அச்சமோ, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமோ, முகக்கவசம் அணிவது குறித்த அக்கறையோ பலருக்கும் இல்லை.

காற்று கூட போக வழி இல்லாத அளவு மக்கள் தெருக்களில் நடந்து செல்கின்றனர். ஆனாலும் போலீசார் முகக்கவசம் அணியாமல் வருவோரை திருப்பி அனுப்பி வருகிறார்கள். மாஸ்க் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது, கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கடைகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் கூட்டத்தை பார்க்கும் போது, முகக்கவசம் பலரும் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளிக்கு துளியும் வாய்ப்பில்லாத நிலை தான் காணப்படுகிறது.

தீபாவளி நெருங்கும் சமயத்தில் கூட்டம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் திருட்டு, வழிபறி நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவும் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்