சென்னை:
மிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழக போக்கு வரத்துத் துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக போக்குவரத்துத் துறைஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  தீபாவளி சிறப்பு பேருந்துகள் எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து இயக்கப்படுகின்றன? என்பது குறித்து விளக்கினார்.

மேலும், தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு ஏகனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  சிறப்பு முன்பதிவு வரும் 23ந்தெதி தொடங்குவதாகவும் அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம்  சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில்  நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தீபாவளி பண்டிகைக் காலத்தில் மக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 3 ஆண்டுகள் முடிந்து இது 4-வது ஆண்டு. இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்று கூறினார்.

அதுபோல இந்த ஆண்டும், எந்த விதமான போக்குவரத்து நெரிசலும் இல்லாமல், மக்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வதற்கு ஏதுவாக ஏற்பாடுகளை போக்குவரத்துத் துறையும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும்  செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

சிறப்பு பேருந்துங்கள் இயக்கப்படும் இடம் விவரம்

ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

வேலூர், காஞ்சிபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

திருவண்ணாமலை செல்லக்கூடிய பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து  இயக்கப்படும்.

தாம்பரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி வாயிலாக செல்லக்கூடிய பேருந்துகள்  இயக்கப்படும்.

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரம் செல்லக்கூடிய மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த அனைத்து பேருந்துகளையும் ஒன்றிணைத்து மாநகரப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

அதேபோல, ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தை தற்காலிக பேருந்து நிலையமாகப் பயன்படுத்தி வந்தோம். தனியார் ஆம்னி பேருந்துகளிலும் அரசுப் பேருந்துகளிலும் முன்பதிவு செய்தவர்கள் அங்கிருந்து வசதியாகப் பயணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தோம்.

இந்த ஆண்டு அங்கு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், அதை போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் இறுதியாக முடிவெடுக்கப்படும்.

பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 23 முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறப்பு முன்பதிவு வரும் 23-ம் தேதி தொடங்க இருக்கிறது.

அதேபோல தமிழகத்தில் தொழில் நகரமாக இருக்கக்கூடிய கோவை, திருப்பூர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அதிகமான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதற்கும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, அடுத்து நடைபெறும் கூட்டத்தில் அதற்கு உண்டான முடிவுகள் எட்டப்படும்.

பண்டிகை முடிந்து மக்கள் தங்கள் ஊர்களுக்கு மீண்டும் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் போக்குவரத்துத் துறை செய்திருக்கிறது.

அதேபோல, கனரக வாகனங்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் அவை சென்னைக்குள் வராமல் இருப்பதற்காக போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்”.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.