தீபாவளி சிறப்பு பஸ்கள் புறப்படும் 5 இடங்கள் அறிவிப்பு! விரிவான தகவல்!!

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி 21289 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக ரெயில் மற்றும் பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

ஏற்கனவே ரெயில் மற்றும் பஸ்களில் உள்ள முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்து பதிவாகி உள்ளது. மேலும் கடைசி நேரங்களில் செல்லும் மக்களின் வசதியை கணக்கில்கொண்டு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையொட்டி, 21,289 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ticket-counters-at-the-koye

தற்காலிக பஸ் நிலையங்கள் விவரம்:

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம்

மாநகர போக்கு வரத்து கழக அண்ணா நகர் (மேற்கு),

மாநில தேர்தல் ஆணைய அலுவலகம்,

தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் மற்றும்

பூந்தமல்லி

ஆகிய 5 இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகிற 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

1. ஆந்திரா செல்லும் பஸ்கள்  – அண்ணாநகர் மேற்கு பஸ் நிலையம்

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பஸ்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

2. இ.சி.ஆர். மற்றும் காஞ்சீபுரம் பஸ்கள் – மாநில தேர்தல் ஆணையம், கோயம்பேடு

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் மற்றும் காஞ்சீபுரம் செல்லும் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

3. விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக செல்லும் பஸ்கள் – சானடோரியம், தாம்பரம்

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும் (எஸ்.இ. டி.சி. உள்பட) தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் (மெப்ஸ்)ல் இருந்து புறப்படும்.

4. வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் – பூந்தமல்லி பேருந்து நிலையம்

பூந்தமல்லி வழியாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

5. இதர ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் – கோயம்பேடு பஸ் நிலையம்

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, செங்கானாச்சேரி, கொட்டாரக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

சென்னையில் இருந்து 26-ந்தேதி 3 ஆயிரத்து 254 பஸ்களும், 27-ந்தேதி 3 ஆயிரத்து 992 பஸ்களும், 28-ந்தேதி 3 ஆயிரத்து 979 பஸ்களும் மொத்தம் 11 ஆயிரத்து 225 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதர பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ள சிறப்பு பஸ்கள்:-

26-ந்தேதி 2 ஆயிரத்து 507 பஸ்களும், 27-ந்தேதி 3 ஆயிரத்து 488 பஸ்களும், 28-ந்தேதி 4,069 பஸ்களும் மொத்தம் 10,064 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

koyambedu

வெளியூர் செல்லும் பஸ்களை பிடிக்க 3 பஸ் நிலையங்களுக்கு 200 மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது.

தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் வருகிற 26-ந்தேதி, 27-ந்தேதி, 28-ந்தேதி ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் நீண்ட தூர பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள 3 இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. அண்ணாநகர் (மேற்கு) பேருந்து நிலையம்.

2. தாம்பரம் சானிடோரியம் (மெப்ஸ்) பேருந்து நிலையம்.

3. பூந்தமல்லி பேருந்து நிலையம்.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட 3 பேருந்து நிலையங்கள் பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற் குறிப்பிட்டுள்ள 3 பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்றடையவும் வெளி மாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 200 சிறப்பு இணைப்பு பேருந்துகளை 26-ந்தேதி, 27-ந்தேதி, 28-ந்தேதி ஆகிய 3 நாட்களில் இயக்க உள்ளது.