சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி குறித்து பேசி வந்த தேமுதிக, பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், கூட்டணி அமைக்கப்படுவதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், மீண்டும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் மோடி தலைமையில் அதிமுக பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில்,  அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் இன்று மதியம் வரை  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுகவுடனான பேச்சு வார்த்தையில் இழுபறியை தொடர்ந்த தேமுதிக, இன்னொரு புறம் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மூலம் திமுகவின் கதவையும் தட்டியது. ஆனால், திமுகவோ, கூட்டணி  அமைக்க தங்களிடம் தொகுதிகள் இல்லை என்று கூறி விரட்டியடித்தது.

ஆனால், மனசை தளர விடாத தேமுதிக எல்.கே.சுதீஷ், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலையும் சந்தித்து பேசி வந்தார். ஆனால், கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில்,  பொதுக்கூட்ட மேடையில் ஒட்டப்பட்ட விஜயகாந்த் படம் அகற்றப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் செய்தியாளர்களை சந்தித்த எல்.கே.சுதீஷ்,  ‘அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்’ என்று கூறினார்.

தேமுதிகவின் பலத்தின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கட்சியின் பலம் எங்களுக்குத்தான் தெரியும், எங்கள் தேவையை தெரிவித்துள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி இறுதியாகலாம்.

தமிழகத்தில் அடுத்த முறை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார்” என சுதீஷ் தெரிவித்தார்.