சென்னை:

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டித்து உள்ளார்.

தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை கடந்த  ஞாயிற்றுக் கிழமையன்று இரவு சாணம் வீசி அவமதிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், ஒரு தரப்பினர் மதரீதியிலான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இவையனைத்துக்கும் மேலாக இன்று இந்துமக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, சூடம் காட்டி மரியாதை செய்தார். இந்த சம்பவம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்கு உரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,    தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது. ஜாதி, மதங்கள் மற்றும் தலைவர்களின் சிலை வைத்து அரசியல் செய்தது போக, திருவள்ளுவர் சிலையை வைத்து அதன் மூலம் அரசியல் செய்வதை நிச்சயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர்,அவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.இது மோதல்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்த காரணமாகிவிடும். தமிழகஅரசு உடனடியாக கவனம் செலுத்தி,இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.