விஜயகாந்த் குடும்பத்தினர் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கிய தேமுதிகவினர்…

சென்னை: தேமுதிகவில், சட்டமன்ற தேர்தலையொட்டி விரும்ப மனு பெறப்பட்டு வருகிறது. இதில்,  விஜயகாந்த் குடும்பத்தினர் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளனர் தேமுதிகவினர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. . இதையடுத்து, திமுக, அதிமுக உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என  அறிவித்துள்ள நிலையில்,  தேமுதிகவும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் அளிக்கப்பட்டு  வருகிறது. விருப்பமனு வாங்குபவர்கள், மார்ச் 5-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், பொதுத்தொகுதிக்கு விருப்பமனு கட்டணமாக ரூ.15,000-மும், தனித்தொகுதிக்கு ரூ.10000-மும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயபாஸ்கரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு வாங்கியுள்ளனர்.

விருதாச்சலத்தில் விஜயகாந்த்தும், விருகம்பாக்கத்தில் பிரேமலதாவும், அம்பத்தூர் தொகுதியில் விஜயபிரபாகரனும் போட்டியிட தொண்டர்கள் விருப்ப மனு வாங்கியுள்ளனர்.