சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, விஜயகாந்தின் மைத்துனரும், பிரேமலதாவின் சகோதருமான எல்.கே.சுதீசுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், இரு கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.  தேமுதிகவின் கோரிக்கை ஏற்க அதிமுக தலைமை மறுத்துள்ளதால், கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த் நலமுடன் இருந்து தேர்தல் பணியாற்றியபோது, தேமுதிகவுக்கு என தமிழக மக்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் இருந்து வந்தது. அதற்கு என தனி வாக்கு வாங்கியும் உருவானது. அதனால்தான், தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமரமுடிந்தது. ஆனால், தொடர்ந்து, விஜயகாந்த் குடும்பத்தினர் தலையீடு காரணமாக, தேமுகவில் இருந்து பலர் வெளியேறிய நிலையில், விஜயகாந்தும் நோய்வாய்ப்பட்டு, பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதைத்தொடர்ந்து கட்சியை கையில் எடுத்த, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும், அவரது சகோதரர் எல்.கே.சுதீசும், தேமுதிகவை குடும்ப கட்சியாக மாற்றி செயல்பட்டு வருகின்றனர். இதனால், மனம் வெறுத்துப்போன பல தலைவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில், தேமுதிக கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு மண்ணை கவ்வியது. இருந்தாலும், தங்களுக்கு வாக்கு வங்கி இருப்பதாக கூறி அதிமுகவிடமும், திமுகவிடம் பேரம் பேசி, மூக்குடைபட்ட சம்பவங்களும் அரசியல் களத்தில் தேமுதிகவின் நிலைப்பாட்டை  மேலும் கவலைக்குள்ளாக்கியது.

இந்த நிலையில்தான், தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தொடர வேண்டுமானால்,  குறைந்தது 41 தொகுதிகள் வேண்டும் இல்லையேல் 3வது அணி அமைப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தனது பாணியில்  பிரேமலதா மிரட்டினார்.

தேமுதிக தலைவர் பேச முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடைபிணமாக காட்சி தரும் நிலையில், அவரது முந்தைய நடவடிக்கைகளைக் கொண்டு, ஆதாயம் தேடும் முயற்சியில், அவரது மனைவியும், மைத்துனரும் ஈடுபட்டு அரசியல் பேரத்தை நடத்தி  வருவது அதிமுக தலைமையை எரிச்சடைய செய்துள்ளது.  மேலும் சசிகலாவை தொடர்பு கொண்டும் ரகசிய பேரம் நடத்தியது. இதன்மூலம் அதிமுகவுடன் கூடுதலாக பேரம் படியும் என எதிர்பார்த்தது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தொடர,  தேமுதிக, கட்சிக்கு 40 இடங்களும், எல்.கே.சுதீசுக்கு, ராஜ்யசபா எம்.பி. பதவியும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை ஏற்க அதிமுக தலைமை மறுத்துவிட்டது. குறைந்த பட்சம் 20 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று தெரிவித்துள்ளதுடன், ராஜ்யசபா எம்.பி. பதவி எல்லாம் தர முடியாது என்று கைவிரித்துவிட்டது. 

இதற்கிடையில், கட்சியினரிடையே பேசிய எல்.கே.சுதீஷ்,   2011 தேர்தலில் நாம் அதிமுக கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியை இருந்திருக்காது என்று கூறி அதிமுகவை மேலும் வெறுப்பேற்றியவர்,  நபாம்,  கூட்டணிக்காக கெஞ்சவில்லை. அவர்கள் தான் நம்மிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். வேண்டும் என்றால் என் தொலைபேசியில் எத்தனை அழைப்புகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம் என கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்தும் விமர்சித்தார். விஜயகாந்த்தான் அடுத்த முதல்வர் என்று டிவிட் பதிவிட்டும், தேமுதிக சேரும் இடம்தான்  அமோகமாக வெற்றி பெறும். ராஜ்யசபா சீட்டுக்காக நான் ஆசைப்பட்டதே இல்லை என்பது போன்று பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

எல்.கே.சுதீஷ்ன் பேச்சு, அதிமுக தலைமையை கொந்தளிக்க வைத்துள்ளது.  ஆனால், தற்போது சசிகலாவும்  அரசியலை விட்டே ஒதுங்கிவிட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட பேரமும்  கலைந்துபோனது. இதனால் இருதலைக்கொள்ளி எறும்பாக  தேமுதிகவின் நிலைமை உள்ளது.

இந்த நிலையில்,  தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு அதிமுக தலைமைப் பேச்சாளர்  வைகைச்செல்வன்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அதிமுக யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை, சுதீஷ் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அப்படிப் பேசியிருக்கலாம். இருப்பினும் அதிமுகவை உரசிப் பார்க்கும் செயலில் தேமுதிக இடம்பெற வேண்டாம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அதிமுக தலைமை, வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கி உள்ள நிலையில், பாஜகவுடனான தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. பாமகவுக்கு ஏற்கனவே  23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கும் அதே அளவு தொகுதிகளை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தேமுதிக விவகாரத்தில், இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.