அதிமுகவிடம் சரணடைந்த தேமுதிக…?! நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சு வார்த்தை…..

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில்,  அதிமுக  கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில், பிரேமலதாவின் நிபந்தனை காரணமாக, கூட்டணி இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், தேமுதிக நிர்வாகிகள் ஒரு தரப்பினர் திமுக கூட்டணியில் சேரலாமா என அங்கு தூதுவிட, திமுக கதவை அடைத்து திருப்பி விட்டது. இதற்கிடையில், நேற்று மோடி தலைமையில் கூட்டணி கட்சியினர் பொதுக்கூட்டமும் நடைபெற்று முடிந்து விட்டது.

பல்வேறு நிபந்தனைகளை தேமுதிக சார்பில், பிரமேலதாவின் கறார்  நிபந்தனைகளால், இரு கட்சிகளும், தேமுதிகவை  கழற்றி விட, தற்போது  அரசியல் அனாதையாக களத்தில் நிற்கிறது.

இந்த நிலையில்,  தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் நேற்று மாலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தங்களது கட்சியையும் அதிமுக பாஜக அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு சரணடைந்தார்.

ஆனால், பிடிகொடுக்காமல் பேசிய பியூஸ் கோயல், மோடி கூட்டத்துக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என்று, சுதீசை திருப்பி அனுப்பி விட்டார்.  இதன் காரணமாக தேமுதிக நிர்வாகிகளிடையே பலத்த அதிருப்தி நிலவியது.

இந்த பரபரப்பான சூழலில். மோடி கூட்டம் முடிந்ததும், மீண்டும் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தே.மு.தி.க. துணைச் செயலாளர் சுதீஷ்  உடன் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது எந்த முடிவும் ஏற்படவில்லை.

மீண்டும் இரவு பேச்சு வார்த்தை நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் கலந்துகொண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது. அதிமுக ஏற்கனவே கூறியதை விட்டு இறங்கி வர மறுத்து விட்டது.

இன்றும் பேச்சு வார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருந்த விஜயகாந்த், பிரேமலதாவால் இன்று இப்படி ஆகிவிட்டாரே என்று தேமுக தொண்டர்கள் பரிதவித்து வருகின்றனர்….

கார்ட்டூன் கேலரி