சட்டையை கிழித்த ஸ்டாலின்…. ! துரைமுருகன் பெரிய மனுஷனா? திமுகவை கடுமையாக விமர்சித்த பிரேமலதா

சென்னை:

ன்று செய்தியாளர்களிம் தேர்தல் கூட்டணி மற்றும் திமுகவிடம் தேமுதிக கூட்டணி பேசியது குறித்து பிரேமலதா  திமுகவையும் கடுமையாக சாடினார்.

துரைமுருகனை பெரிய மனுஷனா என்று கேள்வி விடுத்தவர், சட்டையை கிழித்துக்கொண்டு போட்டோ எடுக்க வாங்க.. வாங்க என்று கூறிய திமுக  தில்லுமுல்லு கட்சி  என்றும் கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக, அதிமுக ஆகிய இரு அணிகளிடம் திரைமறைவில் பேசி வந்த தேமுதிகவின் அரசியல் நாடகத்தை திமுக பொருளாளர் துரைமுருகன் பகிரங்க படுத்திய தால், கடும் கோபம் அடைந்த தேமுதிக,  அதுகுறித்து விளக்கம் அளிக்க  சென்னை கோயம் பேட்டில் உள்ள  கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது,  ராணுவ கொள்கைகளை கொண்ட கட்சிதான் தே.மு.தி.க. தமிழக மக்கள் 100 சதவீதம் தே.மு.தி.க மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதை யாராலும் சீர்குலைக்க முடியாது என்றவர்,  கூட்டணி உறுதி செய்த பின்னர் யாராவது திமுகவிடம் கூட்டணிக்காக பேசுவார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மக்களவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றவர்,  தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, எந்த குழப்பமும் இல்லை. திமுக, அதிமுக என இரு தரப்பினருடன் பேசியதாக கூறப்படுவதே தவறு என்றார்

திமுக தொகுதி பங்கீடு முடிந்து விட்டது என அறிவித்த பிறகு யாராவது கூட்டணி பேசுவார்களா?   தேமுதிகவினர் துரைமுருகனை சந்திக்கும் முன் வராத ஊடகத்தினர் சந்தித்த பின்னர் எப்படி வந்தனர்?  சாதாரண விவகாரத்தை சூழ்ச்சி மூலமாக திமுக பூதாகரமாக்கி விட்டது. தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது

உங்களை பெரிய மனிதர் என்று நம்பித்தானே எங்களது நிர்வாகிகள் உங்கள் வீட்டு வந்தார்கள். ஆனால், நீங்கள் காட்டும் மரியாதை இதுதானா? இதுதான் பெரிய மனுஷனுக்கு அழகா, இது தான் தமிழர்களின் கலாச்சாரமா என்று சரமாரியாக வசை பாடியவர், துரைமுருகன் பேசியது வெட்கக்கேடானது என்றும்,  உட்கார்ந்த இடத்திலிருந்து அவர் தூங்குவார் என்று கேள்விப் பட்டிருக்கேன். அதற்காக இப்படியா உளற வேண்டியது என்றும் விமர்சித்தார்.

திமுக என்றாலே திருட்டு கட்சி என்று அப்போதே பதிவு செய்துவிட்டார் எம்.ஜி.ஆர். ஆனால், திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி என்பது தேமுதிகவின் கணிப்பு என்றும் பிரேமலதா விமர்சித்தார்.

சமீபத்தில் ஸ்டாலின் வீட்டிற்கு வந்து விஜயகாந்தை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, விஜயகாந்த்துடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்றார். ஆனால், என்னிடம் கேட்டபோது யதார்த்தமாக அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேசாமலா இருப்பார்கள் என்று கூறியவர், விஜயகாந்திடம் பேசியது குறித்து  ஸ்டாலின் முதலில்  சொல்ல வேண்டும் என்றார்.

கலைஞர் உடல்நலம் இல்லாத போது சந்திக்க விஜயகாந்த் அனுமதி கேட்டார். ஆனால் ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை என்றவர், தேமுதிகவை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது.

ராணுவ கொள்கைகளை கொண்ட கட்சிதான் தே.மு.தி.க.  தமிழக மக்கள் 100 சதவீதம் தே.மு.தி.க மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதை யாராலும் சீர்குலைக்க முடியாது.

இவ்வாறு பேசினார்.