எங்களை குறைத்து எடை போட வேண்டாம்: அதிமுகவுக்கு தேமுதிக நிர்வாகிகள் மிரட்டல்

--

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்படவில்லை என அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெங்கடேசன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து, மக்கள் அளித்துள்ள முடிவுகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நம் வெற்றியை குறைத்துவிட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் நம் கூட்டணி அபார வெற்றிபெற்றது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியினரிடையே ஒற்றுமையும், வேகமும் இருந்தது. ஆனால் உள்ளாட்சியில் கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லை. இதனை ஒருங்கிணைப்பு செய்யவேண்டிய அதிமுகவும், அந்த வேலையை செய்யவில்லை. தேமுதிகவுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அதிமுக கொடுக்கவில்லை. சீட்டு கொடுத்துவிட்டு, தேமுதிக நிற்கும் அதே பகுதியில் அதிமுகவினர் சிலரை சுயேச்சையாகவும் களமிறக்கினார்கள். பல இடங்களில் அதிமுக சின்னங்களையும் வழங்கி போட்டியிட வைத்தார்கள். உள்ளாட்சி தேர்தலில் நாம் வஞ்சிக்கப்பட்டோம்.

தேமுதிகவை குறைத்து எடைபோட வேண்டாம். எங்களது பலத்தையும், வாக்கு வங்கிகளையும் நிரூபிக்க தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக மற்றும் பாஜக தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது தேமுதிகவிலும் அதிருப்தி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை அதிமுக தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளது.