தேய்ந்து போன தே.மு.தி.க. 

--

vijayakanth_new 3.2_0

சென்னை: கணிசமான வாக்கு வங்கி கொண்டிருந்த தே.மு.தி.க. இந்தத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளையே பெற்றிருக்கிறது. இதன் மூலம் அக் கட்சி தனது வாக்கு வங்கியை இழந்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

 

கடந்த 2006 தேர்தலில் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது தேமுதிக. அப்போது  தனித்துப்போட்டியிட்ட சுமார் 10 சதவீத வாக்குகளைப் பெற்று பிற கட்சிகளை மிரள வைத்தது.

திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக இருக்கும் என்று நம்பியவர்கள் அக் கட்சிக்கு வாக்களித்தனர்.  மீண்டும்  2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து நின்று  39 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக 10.3 சதவீத வாக்குகள் பெற்றது.

இதனால் புதிய மாற்று சக்தியாக விஜயகாந்த் எழுந்திருக்கிறார் என்று பலராலும் கருதப்பட்டது. அவரது வாக்கு வங்கி அசைக்க முடியாதது என பிற கட்சிகளும் நம்பின.

இதையடுத்து 2011 சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சியுடன் கூட்டணி வைக்க, திமுக அதிகமுக இரு கட்சிகளும் போட்டி போட்டன.  அத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து  பெரும் வெற்றியைப் பெற்ற விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

சில மாதங்களிலேயே அதிமுகவுடன் மனக்கசப்பு ஏற்பட.. அக் கட்சியையும் விமர்சிக்கத்தொடங்கினார் விஜயகாந்த்.

இதற்கிடையே 2014 பாராளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது, தான் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை சொல்லாமல் கிட்டதட்ட அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இழுத்தடித்தார். இதனால் பிற கட்சிகள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும்   அதிருப்தி அடைந்தன. இறுதியில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

அத் தேர்தலில் 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டு, வெறும் 5.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.

ஆனாலும் இந்த சட்டமன்றத் தேர்தலிலும் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு அரசியல் வட்டாரத்தில் மவுசு இருந்தது. ஆகவே பாஜக, திமுக, மக்கள் நலக்கூட்டணி ஆகிய கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தின.

கடந்த பாராளுமன்ற தேர்தலைப்போலவே இப்போதும் தனது முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்தார் விஜயகாந்த். ஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் பல்வேறு யூகங்கள் எழுந்தன.

இது மக்களிடையே விஜயகாந்த் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் தான் பேசும் கூட்டங்களில் தொடர்பின்றி பேசிவந்தார். அதோடு தனது கட்சி பிரமுகர்களை பொது இடங்களில் வைத்தே அடித்தார்.

ஆனாலும் இவரை முதல்வர் வேட்பாளராக தே.மு.தி.க. – ம.ந.கூட்டணி முன்னிறுத்தியது.

ஆனால் இன்று வெளியாகிவரும் தேர்தல் முடிவுகளின் படி 2.2 சதவிகித வாக்குளை மட்டுமே தேமுதிக பெற்றிருக்கிறது.

அக் கட்சியின் செல்வாக்கு கட்டெறும்பு அளவுக்கு ஆகிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.