a
வரும்  சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு 77 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 73 இடங்களும் கிடைக்கும் என்று  ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழ்  கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 16ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. கட்சிகளின் வெற்றி தோல்வி விவரம் மே19ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தெரியவரும்.
இதற்கிடையே ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் பல, கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழும் தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.  அதில் திமுக 77 இடங்களையும், அதிமுக 73 இடங்களையும் பெறும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவிற்கு 1 இடம் கிடைக்கும் என்றும் 83 இடங்களில் இழுபறி நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில்  காங்கிரஸ், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன.  இந்த கூட்டணிக்கு 77 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று ஜூனியர் விகடன்  கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக உடன் சமக, இந்திய குடியரசுக்கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட 7 சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அனைத்தும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதில் அதிமுக 227 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 73 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஜூனியர் விகடன் கூறியிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் இக் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.  தேமுதிக – மக்கள் நலக்கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் 83 இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது என்றும் இக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
கட்சி வாரியாக பார்த்தால் அதிமுகவிற்கு 73 இடங்களும், திமுகவிற்கு 64 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக இக் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் வெல்லும் என்றும் கூறியுள்ளது.
தலைவர்களைப் பொறுத்தவரை, முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிடும் ஜெயலலிதா, கருணாநிதி, அன்புமணி ராமதாஸ் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ம.ந.கூட்டணி தேமுதிக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியிலும், நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சீமான் கடலூர் தொகுதியிலும் தோல்வி அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தனி கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.