திமுக துணை பொதுச் செயலாளராக நியமித்த ஸ்டாலினுக்கு ஆ. ராசா நன்றி…!

சென்னை: திமுக துணை பொதுச் செயலாளராக நியமித்த ஸ்டாலினுக்கு ஆ. ராசா நன்றி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கொரோனா காரணமாக முதல்முறையாக பொதுக்குழு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதே போன்று திமுக துணைப் பொதுச்செயலாளராக  ஆ.ராசா,பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். கூட்டம் முடிந்த பின்னர், திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

துணை பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந் நிலையில், திமுக துணை பொதுச் செயலாளராக நியமித்த ஸ்டாலினுக்கு ஆ. ராசா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

வரலாற்று சிறப்புமிக்க இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் என்னை கழக துணைப் பொதுச் செயலாளராக நியமித்த கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.