கரூரில் அதிமுக திமுக மோதல்: நாஞ்சில் சம்பத் கார்மீது பயங்கர தாக்குதல்!

கரூர்:

ரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நாஞ்சில் சம்பத் கார்மீது அதிமுகவினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாவட்டஆட்சித்தலைவர் கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதி மணி மற்றும் திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜி ஆகியோர் தனது வீட்டுக்கு வந்து மிரட்டல் விடுத்தாக புகார் கூறியிருக் கும் நிலையில், இன்று நாஞ்சில் சம்பத்தின் பிரசார வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி. அதிமுக சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. தம்பித்துரையை தோற்கடிக்க அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக நிர்வாகியுமான செந்தில் பாலாஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கரூர் பேருந்து நிலையத்தின் அருகில் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்வது தொடர்பாக அதிமுக- திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோர், இறுதிக்கட்ட பிரசாரம் செய்வதற்கான நேரம் மறுக்கப்பட்டதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் கடநத் 14ந்தேதி  உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்ஆர்.விஜய பாஸ்கர் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் செந்தில்பாலாஜியின் ஆட்கள் சிலர் கரூர் ஆட்சித்தலைவர் வீட்டுக்கு வந்து மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று பிரசாரம் மேற்கொள்ள வந்த நாஞ்சில் சம்பத்தின்   கார்மீது அதிமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. இந்த மோதலில்  காவல் உதவி ஆய்வாளரின் மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, கரூரில்  துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருகிறது.