டெல்லி: இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசங்கர்  இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து பதில் அளித்தார்.

மாநிலங்களவை இன்று கூடியதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் கப்பலால் மோதி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து, திமுக,  அதிமுக எம்பிக்கள்  பிரச்சனையை எழுப்பினர். திமுக எம்பி திருச்சி சிவா பேசும்போது, தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றுவிட்டதாகவும், இலங்கை  கடற்படையால் அடிக்கடி பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிடுவது பற்றி யோசிப்பதாகவும் தெரிவித்து, இலங்கைஅரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதுபோல, அதிமுக எம்.பி. தம்பித்துரையும்,  இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தமிழக மீனவர்கள் விவகாரத்தில்,  மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பியதை அடுத்து, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்தார். அப்போது, தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை என்றவர், இது தொடர்பாக  இலங்கை அரசுக்கு மத்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.